பக்கம் எண் :

 அணியியல் - உவமையணி்

145 

     இ-ள் :   போல என்பது முதலிய பதினாறும் அன்ன என்பது முதலிய எட்டும்
 என்ன என்பது முதலிய எட்டும் முறையே தம்முடைய வரலாற்று முறைமையானே
 முற்கூறிய உருப் பற்றியும் வடிவு பற்றியும் வரும் பண்பும், தொழிலும் பயனும் ஆகிய
 மூன்று உவமைக்கும் பொருந்திய உருபுகளாம். இங்ஙனம் கூறிய மூவகை
 உவமத்தின்கண்ணும் ஒன்ற என்பது முதல் இன்ன என்பது ஈறாகக் கிடந்த
 இருபத்தாறும் இவைபோல்வன பிறவும் உருபு ஆதற்குப் பொருந்துதல் உரியவாம்
 என்றவாறு.

     இங்ஙனம் வரையறுத்தல் கடப்பாடு அல்லது வேறு காரணம் இன்று என்பார்.
 "தத்தம் மரபில் சாற்றும்" என்றும், இவையும் இவைபோல்வன பிறவும் உருபாம்
 இடத்து வினையெச்ச நீர்மையவாயும் பெயரெச்ச நீர்மையவாயும் முற்றுநீர்மையவாயும்
 இடைச்சொல் நீர்மையவாயும் வரும் என்பார் உருபு என்று ஒழியாது "உருபாம்"
 என்றும் கூறினார்.

விளக்கம்

     [புலி போலப் பாய்ந்தான் -- என்ற தொடரில் போல என்ற உவமை உருபு
 வினையெச்ச நீர்மைத்து.

     புலி அன்ன சாத்தன் -- என்ற தொடரில் அன்ன என்ற உவமை உருபு
 பெயரெச்சச நீர்மைத்து.

     வாய் பவளம் போலும் -- என்ற தொடரில் போலும் என்ற உவமை உருபு
 வினைமுற்று நீர்மைத்து.

     கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும் -- என்ற தொடரில் போல் என்ற உவமை
 உருபு இடைச்சொல் நீர்மைத்து.]

     19-20