வியப்பு உவமை, ஏது உவமை என்பனவாக உவமைவிரி முப்பத்திரண்டாகும். உபமேய அடைக்கு உபமான அடையை மிகுத்துப் புணர்த்தலும், உபமேய
அடைக்கு உபமான அடையைக் குறைத்துப் புணர்த்தலும், இழிந்த உவமையோடு
உயர்ந்த பொருளை உவமித்தலும், உயர்ந்த உவமையோடு இழிந்த பொருளை
உவமித்தலும், உபமான உபமேயங்களிடை முதல்சினை, உயர்திணை அஃறிணை, ஆண்பால்
பெண்பால், ஒருமை பன்மை தம்முள் மாறுபடத் தொடுத்தலும் என்னுமிவை
தொன்றுதொட்டுப் பயன்படுவனவாகச் சான்றோர் கொள்வாராயின் வரையாது
ஏற்றுக்கொள்ளப்படும்; பயன்படவில்லையேல் அவை கொள்ளப்படா. போல மறுப்ப
ஒப்ப காய்ப்ப நேர வியப்ப நளிய நந்த என்ற எட்டும் நிறம்பற்றிய
உவமையுருபுகளாம். கடுப்ப ஏய்ப்ப மருளபுரைய ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்ற
எட்டும் வடிவு பற்றிய உவமையுருபுகளாம். இப்பதினாறும் பொதுவாகப் பண்பு பற்றிய
உவமையுருபு எனப்படும். அன்ன ஆங்க மான விறப்ப என்ன உறழ தகைய நோக்க
என்ற எட்டும் தொழில் பற்றிய உவமையுருபுகளாம். என்ன விழைய புல்ல பொருவ
கள்ள மதிப்ப வெல்ல வீழ என்ற எட்டும் பயன் பற்றிய உவமை உருபுகளாம்.
இவையே அன்றி, ஒன்ற நடுங்க ஏர ஏய இயைய இகல துணைப்ப மலைய தூக்கு
செத்து கெழு தேர் நகை மிகு சிவண் நிகர் இன்ன என்பனவும் பிறவும் பொதுவான
உவமையுருபுகளாம்.
உபமானம் உபமேயம் என்ற இரண்டும் வேறாய் இருக்கும் தன்மையை நீக்கி
இரண்டனையும் ஒன்றாக்கிக் கூறுவது உருவக அணியாம். அவ்வுருவக அணியின்
விரி இருபத்தொரு கூறபாடு உடையது. மாட்டேற்றுச் சொல்லாகிய "ஆகிய" போல்வன
மறைந்து வரும் தொகைஉருவகம், மாட்டேற்றுச்சொல் விரிந்து வரும் விரிஉருவகம்,
சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் உருவகம் செய்யும் தொகைவிரி
உருவகம், உருவகப்படுத்தும் பொருள்களை இயைபு உடையனவாக உருவகம் செய்யும்
இயைபு உருவகம், உருவகப்படுத்தும் பொருள்களை இயைபு இல்லனவாக உருவகம்
செய்யும் இயைபுஇல் உருவகம், உருவகம் செய்யவேண்டிய உறுப்புக்களுள் சிலவற்றை
விடுத்து ஏனையவற்றையே உருவகம் செய்யும் வியனிலை உருவகம்,