உருவகம் செய்யும் பொருள்களுக்குச் சிறப்பான அடை மொழிகளைப் புணர்ந்து உருவகம் செய்யும் சிறப்பு உருவகம், உருவகம் செய்வதற்கு இவை ஏற்புடையன அல்ல என்பதனை விளக்கி உருவகம் செய்துகாட்டும் விரூபகம், பலவற்றை உருவகப்படுத்தி உருவகப்படுத்தியதற்கு ஏற்ப அவை நன்மை தாராது தீங்கு தருதற்கு வேறுகாரணம் உண்டு என்று குறிப்பிடு சமாதான உருவகம், முதலில் உருவகம் செய்யப்பட்டது ஒன்றனையே மீண்டும் உருவகப்படுத்தும் உருவக உருவகம், உறுப்புக்கள் பலவற்றுள் ஒன்றனையே உருவகம் செய்யும் ஏகாங்க உருவகம், உறுப்புக்கள் பலவற்றையும் சில எஞ்ச உருவகம் செய்து உறுப்பியை உருவகம் செய்யாது விடும் அநேகாங்க உருவகம், உறுப்புக்களையும் உறுப்பியையும் குறைவின்றி உருவகம் செய்யும் முற்று உருவகம், உறுப்புக்களை மாத்திரம் குறைவற உருவகம்செய்து உறுப்பியை உருவகம் செய்யதா அவயவ உருகம், உறுப்புக்களை விடுத்து உறுப்பியை மாத்திரம் உருவகம் செய்யும் அவயவி உருவகம் என்பனவும், உருவகம் ஏனைஅணிகளோடும் கூடுவதனால் ஏற்படும் உவமை உருவகம், ஏது உருவகம், வேற்றுமை உருவகம், விலக்கு உருவகம், அவநுதி உருவகம், சிலேடை உருவகம் என்பனவும் ஆம். குணம் தொழில் சாதி பொருள் ஆகியவற்றில் ஒன்றனையோ பலவற்றையோ குறித்து நிற்கும் சொல், ஓரிடத்தில் நின்று பல இடத்து நின்ற சொற்களோடு பொருந்தி அப்பொருளை விளக்கும் அணிதீவக அணியாம். இவ்வணி செய்யுட்களில் முதல் இடைகடை என்ற மூன்று இடங்களிலும் முதனிலைத்தீவகம், இடைநிலைத் வீகம், கடைநிலைத்தீவகம் என்ற பெயர்களோடு பொருந்திவரும். இத்தீவகஅணி மாலாதீவகம், விருத்ததீவகம், ஒருபொருள் தீவகம், சிலேடைத்தீவகம்,உவமைத்தீவகம், உருவகத்வீகம் என ஏனை அணிகளோடும் பொருந்திவரும். ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லே பின்னர்ப் பல முறையும் வருவது சொல் பின்வருநிலை அணியாம், முன்னர் வந்த பொருளே பலமுறையும் பின்னர் மீண்டு வருவது பொருள் பின் வருநிலை அணியாம். சொல்லும் பொருளும் பின்னர் மீண்டு வருவது சொற்பொருட் பின்வருநிலை அணியாம். உபமானப் பொருள் பின்னர் மீண்டுவரின் உபமானப்பொருட் பின்வருநிலை அணியாம்.
|
|
|