வடமொழியில் அணியிலக்கண நூல்கள் பலவாகப் பல்கித் தோன்றலாயின. அவை - பாமஹசூத்ரம், வாமநசூத்ரம், காவ்யாதர்சம், சரசுவதீகண்டாபரணம், சிருங்கார திலகம், காவ்யப் பிரகாசம், அலங்கார சர்வஸ்வம், ரஸதரங்கிணி, ரஸமஞ்சரி, த்வந்யாலோகம், சாகித்ய சிந்தாமணி, சாகித்ய சூடாமணி, சாகித்ய தர்ப்பணம், சமத்கார கந்திரிகை, பிரதாபருத்திரீயம், சாகித்ய ரதநாகரம், சந்திராலோகம், குவலயாநந்தம், சிந்திர மீமாஞ்சை, அலங்கார கௌஸ்துபம், ரஸ கங்காதரம், ஏகாவளி, காவியதர்ப்பணம் முதலியன. தமிழில் அணிநூல் என்றதோர் இலக்கண நூலிருந்தமை அடியார்க்கு நல்லாரால் குறிக்கப்படுகிறது. அதனையடுத்துத் தண்டியலங்காரம் என்ற நூல் தமிழில் தோன்றிய பின்னர், நன்மக்களிடையே அதுவே பெரிதும் வழங்கி வருகின்றது. 11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியத்தின் அலங்காரப் படலமும், 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய மாறன் அலங்காரமும், 17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண விளக்க அணியியலும், 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொன்னூல் விளக்க அணியதிகாரமும், குவலயானந்தத் தமிழாக்கமும், 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய விசாகப் பெருமாளையர் வரைந்த இலக்கணச் சுருக்கத்தின் அணியிலக்கணம், முத்துவீரியத்தின் அணியதிகாரம், சந்திராவோகம், குவலயானந்த விளக்கவுரை ஆகியனவும் இன்று அணியிலக்கணம் பற்றி அறிவதற்கு நமக்குக் கருவிகளாக உள்ளன. இவ்வாறு தமிழில் அணிபற்றிய நூல்கள் பலவாக இருப்பினும், தண்டியலங்காரமே இனிய நூற்பாக்களையும் எடுத்துக்காட்டுப் பாடல்களையும் கொண்டு விளங்குவதால், தமிழிறிஞர் பலரும் அதனையே விரும்பிக் கற்கின்றனர். தொல்காப்பியத்தின் உவமவியல் செய்திகளையும் உட்கொண்டு தண்டியலங்காரத்தைப் பெரும்பாலும் அடியொற்றியே இலக்கண விளக்கப் பொருட்படல அணியியல் அமைந்திருப்பதால், இதுவும் நன்மக்களால் விரும்பிப் பயிலப்படுவதாயிற்று. இவ்வணியிலக்கண நூல்கள் பற்றிச் சுருங்கக் காண்போம். தண்டியலங்காரம் : இந்நூலாசிரியர் வீரசோழிய ஆசிரியர் காலமாகிய 11-ஆம் நூற்றாண்டின் சற்றுப் பிற்பட்டவர். இவர் பெயர் தண்டி என்பது
|
|
|