பக்கம் எண் :

 20

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     சிறப்பினானும் பொருளினானும் குணத்தினானும் ஆகிய உண்மையை மறுத்து
 அதற்கு மறுதலையாகிய பிறிது ஒன்றனை வனப்புநிலை தோன்றக் கூறுவது அவநுதி
 அணியாம்.

     ஒரே சொற்றொடர் ஒன்றற்கு மேற்பட்ட பலபொருள்களைத் தருமாறு அமைப்பது
 சிலேடை அணியாம். அது சொல்லைப் பிரிக்காமல் பலபொருள் கொள்ளும்
 செம்மொழிச்சிலேடை, சொல்லைப் பிரித்துப் பலபொருள் கொள்ளும் பிரிமொழிச்
 சிலேடை என்ற இரு பெரும்பகுப்புக்களை உடையது.  அவ்வணியே ஒரு வினையான்
 வரும் சிலேடை, பலவினையான் வரும் சிலேடை, மாறுபட்ட வினையான் வரும்
 சிலேடை, இரட்டுற மொழிந்தவற்றை வரையறை செய்யும் நியமச்சிலேடை,
 அவ்வரையறையை விலக்கும் நியமவிலக்குச் சிலேடை, முன்னர் இரட்டுற
 மொழிந்தவற்றைப் பின் முரண்படக் குறிப்பிடும் விரோதச்சிலேடை, அவற்றை
 முரணாமல் இரட்டுற மொழியும் அவிரோதச்சிலேடை என்ற ஏழ் வகையான் நிகழும்.
 குணம் தொழில் பொருள் சாதி உறுப்பு முதலாயின குறைபடுதல் காரணமாக ஒரு
 பொருளுக்குச் சிறப்புத் தோன்ற உரைப்பது விசேட அணி ஆகும்.

     புகழ் பற்றியோ பழி பற்றியோ கவி ஒருபொருளைக் குறிப்பிடும் இடத்து,
 அப்புகழ் அல்லது பழி பற்றித் தான் குறிப்பிடக்கருதும் பொருளின் மிக்கபொருளை
 உடன் வைத்துக் குறிப்பிடுவது ஒப்புமைக் கூட்ட அணியாம்.

     சொல்லாலோ, பொருளாலோ, சொல் பொருள் என்ற இரண்டனாலோ மாறுபாடு
 தோன்ற உரைப்பது விரோதஅணியாம்.

     ஒரு பொருளைப் பழிப்பதற்கு வேறொரு பொருளைப் புகழ்ந்து உரைத்துத் தான்
 பழக்கக் கருதிய கருத்தைக் கவி குறிப்பாகப் புலப்படுத்துவது மாறுபடு புகழ்நிலை
 அணியாம்.

     பழிப்பது போல வெளிப்படையாகக் காட்டிக் குறிப்பால் புகழ்ச்சி தோன்ற
 அமைப்பது புகழாப் புகழ்ச்சி அணியாம்.