ஒரு பொருளிடத்து நிகழும் நிகழ்ச்சியின் பயன் பிறிது ஒரு பொருளுக்கு
நன்மையோ தீமையோ புலப்படச் செய்வதாக அமைத்துக் கூறுவது நிதரிசன
அணியாம். இரண்டு பொருளுக்கு ஒரே பண்பையோ வினையையோ புணர்த்துக் கூறுவது
புணர்நிலை அணியாம்.
ஒரு பொருளைக் கொடுத்துப் பிறிது ஒரு பொருளைப் பண்ட மாற்றாகக்
கொள்ளும் செய்தியைக் குறிப்பிடுவது பரிவருத்தனை
அணியாம்.
இத் தன்மையானுக்கு இன்ன நலன்கள் சிறக்க என்று வாழ்த்துவதனைக் கூறுவது
வாழ்த்தணியாம்.
பல அணிகளும் ஒரு பாடலில் அமையுமாறு அமைக்கப்பட்ட பாடலில் உள்ள
அணி சங்கீரண அணியாம்.
பொருள் தொடர்நிலைச் செய்யுளில் முழுதும் நோக்கிக் கொள்ளுமாறு கவி
கருதிச் செய்யும் குணத்தைக் குறிப்பிடுவது பாவிக அணியாம்.
இவ்வாறு செறிவு முதல் சமாதி ஈறாகிய பத்துக் குண அணிகளும், தன்மை
முதல் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து பொருளணிகளும் கூறப்பட்ட பின்னர்ச்
சொல்லணிகள் கூறப்பட்டுள்ளன.
சொல்லணிகள், மடக்கு எனவும் சித்திரகவி எனவும் இரண்டு பெரிய
பாகுபாட்டினுள் அடங்கும்.
நான்கடிச் செய்யுட்கண் எழுத்துக்களின் தொகுதி பிற எழுத்துக்களானும்
சொற்களானும் இடையே தொடரப் பெறாதும் தாமே தொடர்ந்து வந்து வேறு
பொருளை விளக்குதலைக் கூறுவது மடக்கணியாம். அம் மடக்கு ஓரடி முதலாக
நான்கு அடிகாறும் நிகழும். ஒவ்வோரடியினும், ஆதிமடக்கு - இடைமடக்கு -
கடைமடக்கு - ஆதியோடு இடைமடக்கு - ஆதியோடு கடைமடக்கு - இடையோடு
கடைமடக்கு - முற்றுமடக்கு - என்ற எழுவகையுள் ஒன்றான் மடக்கணி அமையும்.