[பொதியிலிருந்து வரும் தென்றல் காற்று ஒரு காரணமும் இல்லாமல் வெதுப்புகின்றது; குளிர்ந்த மதியம் வெப்பம் தருவதற்கும் காரணம் புலப்பட்டிலது; யாம் மனம் தளருமாறு இப்பெண்களுக்கு இயல்பாகவே கண்கள் நீண்டுள்ளன; தனங்கள் பணைத்துள்ளன - என்ற இப்பாடலில்,
தென்றல் எரித்தல், மதியம் வெதுப்பல், கண் நீட்சி, நகில்களின் பணைப்பு என்பனவாகிய காரியங்களே கூறப்பட்டுள்ளன என்பதனையும், தென்றல் எரித்தல் முதலியவற்றிற்குரிய காரணங்கள் குறிப்பால் கொள்ளப்படுமாறு, விளக்கப்படவில்லை என்பதனையும் காண்க.] 34
ஒட்டணியின் இலக்கணமும் விரியும்
654. கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
ஒத்ததுஒன்று உரைப்பது ஒட்டாம்; அதுவே,
அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்,
அடைபொது வாக்கி ஆங்கனம் மொழிதலு,
விரவத் தொடுத்தலும், விபரீதம் படுத்தலும்,
எனநால் வகையினும் இயலும் என்ப.
நிறுத்தமுறையானே இஃது ஒட்டு என்னும் அலங்காரத்தின் பொதுவிதியும் அதன்விரியும் கூறுகின்றது.
இ-ள் : கவிதன்னால் கருதப்பட்டபொருளை மறைத்து அதனை வெளிப்படுத்துவதற்கு ஒத்த பிறிது ஒன்றனைச் சொல்லின் அஃது ஒட்டு என்னும் அலங்காரமாம். அவ்வலங்காரம் கூறுகின்ற பொருளும் அதன்அடையும் வேறுபடத் தொடுப்பதும், அடைபொதுவாய்ப் பொருள் வேறுபடத் தொடுப்பதும், அடை விரவிப் பொருள் வேறுபட மொழிவதும், அடை விபரீதப் பட்டுப் பொருள் வேறுபட மொழிவதும் என நான்கு வகையான் நடக்கும் என்றவாறு. |
|
|