நெறியில் முரண்படக் கூறுவது உலக மலைவாகும். அளவை நூல்கள் உரைக்கும்
செய்திகளில் மாறுபாடு தோன்றக் கூறுவது நியாய நூல் மலைவாகும். அற நூல்கள்
கூறும் நெறி முறைகளில் மாறுபாடு தோன்றக் கூறுவது ஆகம மலைவாகும்.
இவ்வறுவகை மலைவுகளும் உலகியல் வழக்கை விடுத்து நாடக வழக்கைப்
புணர்த்துப் பாடுமிடத்து வழுவமைதியாகக் கொள்ளப்படும்.
இவ்வாறு இவ்வணியியலுள், முத்தகம் முதலிய செய்யுள்களின் கூறுபாடும்,
செறிவு முதலிய பத்துக் குண அணிகளும், தன்மை முதலிய முப்பத்தைந்து
பொருளணிகளும், அடியையும் சொல்லையும் எழுத்தையும் உட்கொண்டு
வரையறுக்கப்பட்ட பலவகை மடக்கு அணிகளும், கோமூத்திரி முதலாகிய இருபது
சித்திர கவிகளும், பிரிபொருள் சொற்றொடர் முதலிய ஒன்பது வழுக்களும், அவற்றின்
வழுவமைதிகளும், இடமலைவு முதலிய ஆறு மலைவுகளும், அவை ஏற்புடையவாகக்
கொள்ளப்படும் இடங்களும் கூறப்பட்டுள்ளன. கூறப்பட்டனவற்றை உணர்ந்த
அறிவான் கூறப்படாதனவற்றையும் உய்த்து உணர்ந்து கோடல் சான்றோர் கடனாகும்.
இவ்வணியியலின் எடுத்துக்காட்டுப் பாடல்களும் நூற்பாக்களும்
பெரும்பான்மையும் தண்டியலங்கார எடுத்துக்காட்டுப் பாடல்களும் நூற்பாக்களுமேயாம்.