[உலகத்து இயல்பு மிகவும் கீழ்ப்பட்டது போலும்! தன்னை வந்து அடைபவருக்கு
 அருமை உடைத்து ஆகாமல் செவ்வி எளிதாய், தேன்போன்ற இனிய சொற்களை
 உடையதாய்க் கருமை என்பதே இல்லாத இவ்வள்ளலாகிய கடல், யாம் வறுமையைப்
 போக்க அடையும் இந்நேரத்தில் வற்றி விட்டதே - என்று ஈத்து வறியவனாகிய
 வள்ளலை அண்மிய இரவலன் சொற்ற இப்பாடலில் வெளிப்படைப் பொருளாகிய
 கடலுக்கு ஏலாதனவாகிய அருமை உடைத்து அன்றாதல் - அம் தேன் போன்ற
 சுவைத்தாதல் -கருமை விரவாதிருத்தல் - ஆகிய மாறுபட்ட அடைகள் குறிப்புப் 
 பொருளாகிய வள்ளலுக்கே உரிய ஆயினவாறு காண்க.]
     உள்ளுறை உவமமும் ஒட்டும் உய்த்து உணரக் கூறும் இலக்கணத்த
 ஆகலின் ஒன்றாம் பிறஎனின், அவ்வாற்றான் ஒன்றாமேனும், புள்முதலிய
 கருப்பொருள் நிலனாகப் புலப்படும் சிறப்பு இலக்கணத்தான் உள்ளுறை உவமமும்,
 யாதானும் ஒத்தது ஒன்று நிலனாகப் புலப்படும் பொது இலக்கணத்தான் ஒட்டும்
 வேறாம் என்றே கோடும். அஃதே அமைக. அன்றியும் சேற்றுள் தோன்றுவன 
 எல்லாம் பங்கயம் எனப் பெயர் பெறாது, வேறு வேறு பெயர் பெறுமாறுபோல, 
 உள்ளுறை உவமம் எனவும் ஒட்டு எனவும் வேறுவேறு பெயர்பெற்ற என்றாலும் 
 ஒன்று.                                                             (35) 
     [உள்ளுறை உவமும் ஒட்டும் வேறு என்று கொள்ளும் ஒரு சாரார் கருத்தை 
 இவ்வாசிரியர் பின்பாற்றினாராயின், இரண்டனையும் ஒன்றாகக் கொண்ட தண்டியார் 
 கருத்தை ஒட்டி உள்ளுறை உவமம் பாடலாகிய "வெறிகொள் இனச்சுரும்பு"  என்பதை
 அடையும் பொருளும் அயல்பட மொழிந்தமைக்கு எடுத்துக்காட்டியுள்ளமை
 ஆராய்தற்குரியது. எனவே "உள்ளுறை..........ஒன்று" என்ற இந்நூற்பா உரையின்
 கடைசிப்பத்தி ஆசிரியர் கருத்து அன்றாக, ஏடெழுதுவோரால் இடை மடுக்கப்பட்டது 
 போலும்.]                                                           35