பக்கம் எண் :

 274

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 



     "போர்வேட்ட மேன்மைப் புகழாளன், யாம் விரும்பும்
     தார்வேட்ட தோள்விடலை தான்"

 என வரும்.

     [தோழீ ! பண்டு போர்தொழிலை வேட்ட மேம்பட்ட புகழை உடையவன், யாம்
 முற்காலத்து விரும்பி மாலையிட்ட தோள்களை உடைய நம் தலைவன், நாம் விரும்பிய
 கலவியினை நிகழ்த்தும் பொழுதும் நம் மென்மை குன்றாதபடி நடந்து கொள்கிறான்" --
 என்ற தலைவிகூற்றாக அமைந்த இப்பாடலில்,

     தலைவி தன்வசம் இழக்கும் வகையில் கலவி நிகழ்த்தாத மென்மை ஆடவருக்குக்
 குறைவு தருவதாகலின், இது புகழ்வது போலப் பழிப்பதாயிற்று. போர்க்களத்தில் வாகை
 சூடியவன் சேக்கைப் போரில் திறலை வெளிப்படுத்துபவன் அல்லனாயினான் என்பது.
 இதன்கண் தலைவன் சாயலைத் தளராமல் தாங்குகிறான் என்று புகழ்வதுபோல அவன்
 சிறந்த சுவைஞன் அல்லன் என்பதனைப் புலப்படுத்தியது காண்க.]

     பழித்ததுபோலப் புகழ்தல் வருமாறு :

     "ஆடல் மயில்இயலி ! அன்பன் அணிஆகம்
     கூடுங்கால், மெல்லென் குறிப்புஅறியான், -- ஊடல்
     இளிவந்த செய்கை இரவாளன், யார்க்கும்
     விளிவந்த வேட்கை இலன்"

     என வரும்.

(43) 

     "ஆண்மயில் போன்ற சாயலை உடையாய் ! தலைவன் என் அழகிய
 மார்பகத்தைக் கூடுங்கால், மெல்லென்ற நம்நலத்தைப் பாராட்டி நுகர்தலை அறியானாய்,
 யான் ஊடி இருக்கும் காலத்துத் தன் தலைமைக்குத் தகாதன சொல்லி இரக்கும்
 இரவாளனாய், யாரையும் அவர் குறிப்பறிந்து விளித்த நுகரத்தக்க வேட்கையற்றவனாய்,
 தன்வேட்கையைத் தணித்தலிலேயே குறிக்கோளுடையனாய் உள்ளான்" -- என்ற
 தலைவி கூற்றாக அமைந்த இப்பாடலில்,