பக்கம் எண் :

 அணியியல் - உதாத்தவணி

293 

     [நாட்டையும் விடுத்து உறவினரையும் நீத்துக் காட்டை அடைந்து கடுமையான
 தவத்தில் ஈடுபட்ட பார்த்தனாகிய அருச்சுனன், தன் வில்லையே துணையாகக் கொண்டு
 தான் ஒருவனாகவே இருந்து, இந்திரனைத் துன்புறுத்திய நிவாத கவச காலகேயர்களின்
 கூட்டத்தை அழித்தான் -- என்ற இப்பாடல், தவம்செய்து உடல் நலிந்த நிலையிலும்
 அருச்சுனனுடைய உள்ளக் கிளர்ச்சியால் ஏற்பட்ட வீரவெற்றி பற்றி விளம்புமாறு
 காண்க.

     மாறனலங்காரம் உதாத்தத்தின் பல கூறுகளையும் விரித்துக் கூறும்.]         50

அவநுதியணி

 670. சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை
      மறுத்துப் பிறிதுஉரைப்பது அவநுதி ஆகும்.

     இது நிறுத்தமுறையானே அவநுதி அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :  சிறப்பினானும் பொருளினானும் குணத்தினானும் ஆகிய உண்மையை
 மறுத்து அதற்கு மறதலையாகிய பிறிது ஒன்றாக உரைப்பது அவநுதி என்னும்
 அலங்காரமாம் என்றவாறு.

     [இஃது ஒழிப்பணி எனவும் பெயர் பெறும்.]

அவநுதி - மறுத்துரைத்தல்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 75

    "ஓங்கும் அவநுதி உண்மை தவிர உரைத்திடலே"                - வீ. 171 

    "குன்றலில் சிறப்பினும் பொருளினும் குணத்தினும்
     ஒன்றிய உண்மையை மறுத்துமற் றொன்றாய்
     ஒருபொருள் தோன்ற உரைப்பது அபநுதி."                   - மா. 226