தவிர, இவரைப்பற்றிய வரலாறு எதுவும் சான்றுகளுடன் கிடைத்திலது, எடுத்துக்காட்டுப்
பாடல்களை நோக்கின், இவர் சோழப் பேரரசு சிறப்புற்ற காலத்தினர் என்பதும்
வீரசோழிய ஆசிரியர் காலத்தை ஒட்டியவர் என்பதும் போதருகின்றன. இந்நூல்
வடமொழி மரபைப் பின்பற்றியதாயினும், எடுத்துக்காட்டுப் பாடல்கள் பலவும் தமிழ்
மரபை ஒட்டிச் சிறப்பாக அமைந்துள்ளன. இந்நூல் பொதுவணியியல்,பொருளணியியல்,
சொல்லணியியல் என்ற மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டு 126 நூற்பாக்களைக்
கொண்டுள்ளது. பொதுவணியலில், செய்யுட்களின் பகுப்பும், வைதருப்பநெறி
கௌடநெறியார்களுக்கு உரிய பத்துக் குணங்களின் விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொருளணியியலில் தன்மை முதலாகப் பாவிகம் ஈறாக 35 அணிகள்
விளக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில அணிகள் பல வகைகளை உடையனவாக
விரிக்கப்பட்டுள்ளன. சொல்லணியியலில் மடக்கின் வகைகளும், கோமூத்திரி முதல் அக்கரச்சுதகம்
ஈறான பன்னிரண்டு சித்திகவிகளும்,அவையேயன்றி நிரோட்டம் முதலிய எட்டுச்
சித்திரகவிகளும்,பிரிபொருள் சொற்றொடர் முதலிய ஒன்பது வழுக்களும், அவற்றின்
அமைதிகளும், இ,டமலைவு முதலிய அறுவகை மலைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இச்செய்திகளைத் தொகுத்துக்கூறும் புறனடையோடு (126) நூல் நிரம்புகிறது.
வீரசோழியம் - அலங்காரப்படலம் : இந்நூல் கட்டளைக்கலித்துறையால் ஆகிய ஐந்திலக்கண நூல். இதன் அலங்காரப்
படலத்தில் 41 காரிகைகள் உள்ளன. அலங்காரங்களைத் 'தண்டி சொன்ன கரைமலி
நூலின்படியே உரைப்பன்' (143) என்று கூறித் தொடங்கும் இவர் வடமொழித்
தண்டியாசரியர் வரைந்த காவியாதர்சத்தை அடியொற்றி இப்படலத்தை
அமைந்துள்ளார்.
தொடக்கத்தில் செய்யுளுக்குக் குற்றமில்லாத உறுப்பு குற்றமுடைய உறுப்பு
இவற்றைச்சுட்டி,வைதருப்பரும் கௌடரும் சுட்டும் பத்து ஆவி இவை எனத் தெளிவு
செறிவு முதலியவற்றை வடமொழிப் பெயரைப் பெரும்பாலும் இட்டு விளக்கி, அடுத்து
நான்கு காரிகைகளில் பொருளணி முப்பத்தைந்தையும் தொகுத்துச்