பக்கம் எண் :

 

 

அணி - இலக்கணம். 

 620. அணிஎனப் படுவது துணிபுஉறக் கிளப்பின்
      குணம் அலங்காரம் எனஇரு திறத்தால்
      பொருள்புலப் படுப்பது என்மனார் புலவர்

 என்பது சூத்திரம். இவ்வோத்து நிறுத்த முறையானே அகனும் புறனும் ஆகிய
 இருவகைப் பொருளும் உணர்த்தி அவற்றை விளக்கும் அணிஇலக்கணம்
 உணர்த்திற்று ஆகலான் அணியியல் என்னும் பெயர்த்து. மேல் ஓத்தினோடு இதற்கு
 இயைபு உடைமையுங் இதனானே விளங்கும். இதனுள் இத் தலைச் சூத்திரம் அணி
 ஆவது இவ்வாற்றான் இவ்வியல்பிற்றாம் என அதன் இலக்கணம் கூறுகின்றது.

     இ-ள்: அணி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தெளிவாகக் கூறும்
 இடத்துக் குணமும் அலங்காரமும் ஆகிய இருவகையால் பொருளை விளக்கி நிற்பது
 என்று கூறுவர் அறிவுடையோர் என்றவாறு.

     பொருள்முற்கூறிய அகப்பொருளும் புறப்பொருளும் என்று உணர்க.         (1)