பக்கம் எண் :

 32

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

விளக்கம்

    "வினைபயன் மெய்உரு என்ற நான்கே
     வகைபெற வந்த உவமத் தோற்றம்"

- தொ. பொ. 276 

 என்ற நூற்பா உரையில் உவமத்தோற்றம் என்பதற்கு உவமத்தால் பொருள்
 தோன்றும் தோற்றம் என விளக்கம் தந்த பேராசிரியர் பொருள் புலப்படுப்பது
 உவம இலக்கணம் என்று கொண்டதனை உட்கொண்டு, இவ்வாசிரியர், அணியின்
 இலக்கணம் பொருளைப் புலப்படுப்பது ஆதலின், அணியியல் அகப்பொருள்
 புறப்பொருள்களை அடுத்து அமைக்கப்பட்ட முறையைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்த நூற்பாக்கள்

    "பொருளினும் சொல்லினும் புனையுறு செய்யுட்கு
     அணியுறப் புணர்த்தலின் அணியெனும் பெயர்த்தே"

- மா. 86 

    "அணியெனச் சொல்பொரு ளாம்இரண்டு அவற்றுள்
     வேற்றுரை வரக்கெடும் அணிசொல் லணிஉரை
     மாற்றினும் தோன்றிய அணிபொருள் அணியே"

- தொ. வி. 302 

மேலதற்குப் புறனடை

 621. பொருட்குஇடம் செய்யுள் ஆதலின் அதனைத்
      தெரிப்பதும் அதனது திறன்எனல் வரையார்.

     இது மேலதற்கு ஒரு புறனடை கூறுகின்றது.

     இ-ள்: மேற்கூறிய பொருட்பகுதி இரண்டற்கும் இடம் செய்யுள் ஆதலின்,
 அதனை விளக்கி நிற்பதும் அவ்வணியினது இயல்பு என்று சொல்லுதலை நீக்கார்
 கொள்வர் என்றவாறு.                                                  (2)