பக்கம் எண் :

 328

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 88

    "திகழ் ஆசியின் சீர்மைசொலின்,
     தப்பாத ஆசீர் வசனம் எனஉணர் தாழ்குழலே."                - வீ. 175 

    "வாழ்த்துவ தாமே வாழ்த்தெனப் படுமே."                     - மா. 246 

    "அதுவே,
     கடவுள் வாழ்த்தே அறுமுறை வாழ்த்தெனத்
     திடனுற வருமிரு சிறப்பிற் றாகி
     வாழ்த்துதல் தானும் மரீஇயதொன் றாகும்."                   - மா. 247 

    "மறையவர் துறவோர் மழைநாடு ஆவுடன்
     பொறைபுரி அரசுஎனப் புகல்இவை யாவும்
     அமரர்கண் எனலாம் அறுமுறை வாழ்த்தே."                  - மா. 248 

    "வாழ்த்தி உரைப்பது வாழ்த்தெனப் படுமே."           - மு. வீ. பொ. 104] 

     வரலாறு :

    "மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி!
     ஆவாழி! வாழி அருமறையோர்! - காவிரிநாட்டு
     அண்ணல் அநபாயன் வாழி! அவன்குடைக்கீழ்
     மண்உலகில் வாழி மழை"

 என வரும். பிறவும் அன்ன.                                           (62) 

     [அழியாத் தமிழை உலகிற்கு வழங்கிய முற்பட்ட பன்னூலும் கற்ற
 அகத்தியன் வாழ்க; பசுக்கள் வாழ்க; அரிய மறைவல்லார் வாழ்க; காவிரி
 நாட்டுத் தலைவனாகிய அநபாயச் சோழன் வாழ்க; அவன் குடைநிழலில்
 மகிழ்ந்திருக்கும் இவ்வுலகில் மழை வாழ்க.

     இஃது "அமரர்கண் முடியும் அறுவகை வாழ்த்து" என்பதன் பாற்படும்.]     62