பலபாட்டாய் வருவனவற்றையும், பொருள் முதலிய நான்கினானும் பாட்டினானும்
அளவினானும் தொகுத்துக் கூறுவதாம் என்றவாறு.
ஒருவனால் உரைத்தன - திருவள்ளுவப்பயன் முதலியன.
பலரான் உரைத்தன - நெடுந்தொகை முதலியன.
இஃது இவ்வறுவகைத் தொகைக்கும் பொது இலக்கணம்.
பொருளால் தொகுத்தன - புறநானூறு முதலியன.
இடத்தால் தொகுத்தன - களவழி நாற்பது முதலியன.
காலத்தினால் தொகுத்தன - கார்நாற்பது முதலியன.
தொழிலால் தொகுத்தன - ஐந்திணை முதலியன.
பாட்டால் தொகுத்தன - கலித்தொகை முதலியன.
அளவால் தொகுத்தன - குறுந்தொகை முதலியன.
"ஆகும்" என்றதனானே, பிறவாற்றான் பெயர்பெற்று வருவனவும் கொள்க.