பக்கம் எண் :

 4

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 சுட்டிப் பின் அவற்றைப் பதினேழு காரிகைகளில் விரித்துக்கூறி, பாட்டுக்களின்
 வகைகளை அடுத்த காரிகையில் சுட்டி, 179-ஆம் காரிகையில் மடக்கினையும், அடுத்த
 காரிகையில் பிறன்கோளாகத் தந்திவுந்தி, தந்திரகுணம், ஆசிரியமதம், தந்திரவுரை
 முதலியவற்றையும் குறிப்பிட்டு, சித்திரகவிகள் சிலவற்றை விளக்கி, விரவியல்,
 மணிப்பிரவாளம், கிளவிக்கவி, துறைக்கவி பிரளிகை முதலிய வினாவிக்கவி
 ஆகியவற்றை விளக்கி, அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் ஆகியனவே
 நூற்பயன் என்று குறிப்பிட்டுத் தம்நூலை முடித்துள்ளார்.

 மாறன் அலங்காரம் :

     16-ஆம் நூற்றாண்டில் ஆழ்வார்திருநகரியில் தோன்றிய திருக்குருகைப் பெருமாள்
 கவிராயர் என்பவரால் மாறன் ஆகிய நம்மாழ்வார் திருநாமத்தை அடியொற்றி
 நூற்பாக்களும் எடுத்துக்காட்டுக்களுமாகப் பாடப்பட்ட இந்நூல் பாயிரவியல்,
 பொதுவியல், பொருளணியில்,சொல்லணியியல், எச்சவியல் என்ற ஐந்து இயல்களையும்,
 327 நூற்பாக்களையும், 844 எடுத்துக்காட்டுப் பாடல்களையும் கொண்டு விளங்குகிறது.
 வைதருப்பநெறி, கௌடநெறி என்ற இருவகை நெறிகளுக்கும் இடைப்பட்ட
 பாஞ்சாலநெறி என்பதொன்று இதன்கண் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளணியியலில் 64
 அணிகள் விளக்கப்பட்டுள்ளன. சித்திரகவிகள் 26 சொல்லணியியலில்
 குறிப்பிடப்பட்டுள்ளன. எச்சவியலில் வழுக்களும் வழுவமைதிகளும் மலைவுகளும்
 அவை பயன்தருமாறும் சுட்டப்பட்டுள்ளன. இந்நூலுக்கு இந்நூலாசிரியரின்
 மாணாக்கராகிய காரிரத்ந கவிராயர் இயற்றிய சிறந்ததோர்உரை அணிசெய்கிறது.

 இலக்கணவிளக்க அணியியல் :

     இதனைப்பற்றி விரிவாக இயலமைப்பில் காணலாம்.

 தொன்னூல் விளக்க அணியதிகாரம் :

     இதன் அணிஅதிகாரம் 69 நூற்பாக்களை உடையது. சொல்லணியியல்,
 பொருளணியியல் என்ற பகுப்புக்களை உடையது. சொல்லணியியலில் தொடங்கும்
 இந்நூலாசிரியர் மடக்கினை மறிநிலையணி என்று பெயரிட்டு விளக்கியுள்ளார்.