அக்கரச்சுதகம் என்பது ஒரு பொருள் பயப்பது ஒரு சொல் கூறி, அச்சொல்லின் ஓரோர எழுத்தாக நீக்க வேறுவேறு பொருள்பயப்பது.
["ஒருபொருள் பயந்த ஒரு தொடர் மொழியாய்
வருவதை ஓரெழுத் தாய்க்குறை வகுப்பில்
சுருங்குபு பலபொருள் தோன்றுவ தாய
அருங்கவி அக்கரச் சுதகம் ஆகும்." - மா.277
"ஒருபொருள் பயப்பது ஒருமொழி இருந்ததில்
ஒவ்வோர் அக்கரம் ஒழிக்கவெவ் வேறு
சொல்லும் பொருளும் தோன்றுவது ழுத்தழிவு
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே." - மு. வீ. சொ. 17]
"பொற்றூணின் வந்தசுடர், பொய்கை பயந்த அண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்
மற்றியார்கொ லென்னில், மலர்தூவி வணங்கி, நாளும்
கற்றர் பரவும் கனகாரி, நகாரி, காரி"
என வரும்.
[பொன் மயமான தூணில் வந்த சோதி நரசிம்மமூர்த்தியாகிய கனகாரி ; சரவணப பொய்கையில் தோன்றிய அண்ணல் கிரவுஞ்ச மலையை அழித்த முருகனாகிய நகாரி ; திருமால் பெண்வடிவில் சிவனோடு கூடிப் பெற்ற மைந்தன் சாத்தனாகிய காரி.
இதன்கண் ஒவ்வொரெழுத்துக் குறைய வெவ்வேறு பெயராதல் காண்க.]
நிரோட்டகம் என்பது இதழ் முயற்சியால் பிறக்கும் மெய்யும் உயிரும் உயிர்மெய்யும் வாராமல் பாடுவது. |