629. கூறிய உறுப்பில் சிலகுறைந்து இயலினும்
வேறுபாடு இன்றுஎன விளம்பினர் புலவர்.
இது மேலதற்கு ஒரு புறனடை கூறுகின்றது.
இ-ள் : மேல் கூறிய உறுப்பில் சில குறைந்து வரினும் பெருங்காப்பியத்தின் வேறுபாடு இல்லை என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.
குறைதலாவது நாற்பொருளில் குறையாது வருணனைகளில் சில குறைதலாம்; என்னை? நால்வகைப் பொருளில் குறைபாடு உடையது காப்பியம் என்றலின்.
(10)
விளக்கம்
தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று அண்மைக் காலத்தில் வரையறுக்கப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி, விளையாபதி என்ற ஐந்தனுள் கடையிரண்டும் இக்காலத்து இல்லையாக, சிலப்பதிகாரம் சிந்தாமணி என்ற இரண்டு பெருங்காப்பியங்களிலும் பெருங்காப்பிய உறுப்புக்கள் சில நீங்கலான ஏனைய பலவும் அமைந்திருத்தல் காண்க. அறமும் வீடும் அன்றிப் பொருளும் இன்பமும் பற்றி உணர்த்தாத மணிமேகலை பெருங்காப்பியத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள விந்தையையும் நோக்குக. சிறுகாப்பியங்களுள் ஒன்றாகிய சூளாமணி  அறம் பொருள் இன்பம் வீடு என்ற நாற் பொருளும் ஏனைய பெருங்காப்பிய உறுப்பும்  பெற்று இலங்கும் சிறப்பையும் நோக்குக.