பொருள்கோள் எட்டும் இதன்கண்ணேயே சுட்டப்பட்டுள்ளன. சொல்மிக்கணி,
சொல்லெஞ்சணி, சொல்லொப்பணி, திரிபியையணி, ஒழுகிசையணி, இயைபிசையணி,
சமவணி எனப்பகுத்துப் பல உட்பிரிவுகளுடன் சொல்லணி முப்பது என்று
கணக்கிடுகிறார். அங்ஙனமே பொருளணி 30 என்று கணக்கிட்டுச் சித்திர கவியையும்
பொருளணியில்அடக்கி அணிகளின்தொகை அறுபது என்று குறிப்பிட்டுள்ளார்.
அணியிலக்கணம் :
19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த அணியிலக்கணம் என்ற இந்நூற்
பகுதியில் பொருளணிகள் 102 சுருக்கமாக எடுத்துக்காட்டுக்களுடன் சுட்டப்பட்டுள்ளன.
இவ்வணியிலக்கணம் சந்திராலோகம் என்ற வடமொழி அணியிலக்கணத்தைத் தமிழ்
மரபுக்கு ஏற்ப ஆக்கியது என்று கருதப்படுகிறது.
சந்திராலோகம் :
அணியிலக்கணம் உரைநடையில் அணிகளை விளக்கிச் செல்வதால் அதற்கு
நூற்பா யாத்து வழங்கியதுபோல, சதாவதானம் முத்துசாமி ஐயஙகார் அவர்களால்
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட சந்திராலோகம் என்ற இந்த
அணிநூல் 126 நூற்பாக்களில் அணியிலக்கணம் குறிப்பிடும் கலவையணிகள் இரண்டும்
நீங்கலான ஏனைய நூறு அணிகளுக்கும் இலக்கணம் வகுத்துச் செல்கிறது.
குவலயானந்தம்:
சந்திராலோகத்தை விரித்து அப்பைய தீக்ஷிதர் இயற்றி விளக்கிய
குவலயானந்தத்தின் மொழிபெயர்ப்பு 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டு,
19-ஆம் நூற்றாண்டு இறுதியில் விளக்கவுரையுடன் வெளிவந்துள்ளது. இது
பொருளணிகள் நூற்றிருபதனை நுவல்கிறது.
முத்துவீரிய அணியதிகாரம் :