வழியே புணர்ந்த சொற்களுடன் வழிமோனை முதலிய வரத் தொடுத்தலுமாம்.
அவற்றால் கேட்டோர் பெறும் இன்பம் சொல்லின்பம்.
பொருள் இன்பமாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங்களுக்கு வரும் இன்பம்
போலக் கவிப்பொருள் உட்கொண்டடோருக்கு வரும் இன்பமாம். ஆகவே
பொருளணியுள்ளும் முக்கியமான பொருளணி யுடைத்தாய்ப் பாடுவதே
பொருளின்பமாகும்.
ஒழுகிசை - செவிக்கு இனிதாய்த் தோன்றும் இனிய ஓசை அமையப் பாடுவது.
உதாரம் - செய்யுட்சொல் நடையால் வரும் பொருளன்றி அதன் குறிப்பினால்
வேறு பொருள் தோன்றுவது.
வலி-தொகைச்சொல் மிக்குவரப் பாடுவது
உய்த்தலின் பொருண்மை - கவி தன்னால் கருதிய செய்யுட் பொருளை விளங்க
விரித்துக் கூறுவதற்குப் பிறிது மொழி பெய்து கூட்டாது அதற்கு உரிய சொற்கள்
செய்யுளகத்து உளவாம்படி பாடுவது.
காந்தம் - ஒன்றனை உயர்த்திப் புகழுங்கால் உலகநடை இறவாமை
ஆராய்ந்து உயர்த்துவது.
சமாதி - உபமேயத்தின் வினையை உவமைக்கு ஏற்றுவதோர் இலக்கணத்தது.
இதுவே குண அலங்காரம் பத்தனுள்ளும் மிகச் சிறந்தது.
செறிவினைச் சிலீட்டம் எனவும், தெளிவினைப் பொருட்டெளிவு எனவும்,
சமனிலையைச் சமதை எனவும், ஒழுகிசையைச் சுகுமாரதை எனவும், உதாரத்தை
உதாரதை எனவும் உய்த்தலின் பொருண்மையைப் புலன் எனவும், காந்தத்தைக் காந்தி
எனவும், தொகையை ஓகம் எனவும் வீரசோழியம் குறிப்பிடும்.