பக்கம் எண் :

   
 

இலக்கண விளக்கம்

பொருளதிகாரம் - செய்யுளியல்

தோற்றுவாய்

     தமிழின் இயல் இசை நாடகம் என்ற முக்கூறுகளையும் பற்றிய விரிவான முதல்
நூல் ஒன்று அகத்தியனாரால் இயற்றப்பட்டது என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர்
முதலிய சான்றோர்களின் கருத்தாகும். தொல்காப்பியனார் முதலாயினார் இயற்றமிழைத்
தனியே கொண்டு இலக்கண நூல் யாத்தமை போலவே சான்றோருள் ஏனையோர்
இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் தனித்தனி நூல் யாத்தனர் என்பதும் சான்றோர்
கருத்தாகும்.

     அகத்தியத்துள் செய்யுள் இலக்கணம் மிக விரிவாகக் கூறப்பட்டமையின் அதனை
மிகச் சுருக்கி வழிநூல் இயற்றுதல் இயலாது போயினமையின், தொல்காப்பியனார்
செய்யுள் இலக்கணத்தைச் சற்று விரிவாகவே இயற்றியுள்ளார் என்பது பேராசிரியர்
கருத்தாகும். (தொல்.பொ. 650) அச் செய்யுள் இலக்கணத்தைப் பல்காப்பியனார்
வகுத்துரைத்தார் என்பதும், அதனைக் காக்கைபாடினியார் தொகுத்து உரைத்தார்
என்பதும்,

 

`தொல்காப் பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார்
பல்காய னார்வகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தம் நூலில் தொகுத்து'
 
     
என்ற வீரசோழியவுரை எடுத்துக்காட்டுப்பாடலால் (152) போதருகின்றன.