பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

17

 
தொடர் எண்   இயல் எண்
742 தளையும் சீரும் வண்ணமும் கெடும் நிலையினைத் தவிர்க்கக் குற்றியலிகரம், குற்றியலுகரம் அளபெடையில் உள்ள குற்றுயிர் என்பனவற்றை அலகு பெறாதனவாய்ச் செய்தல் வேண்டும்; ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்துப்போலக் கணக்கிடப்படும்; ஆய்தமும் ஒற்றும் அளபு எடுக்குங்கால் அலகுபெறும்; அளபெடை ஆகாத ஒற்றுக்கள் ஈரொற்றுக் களாகவும் மூவொற்றுக்களாகவும் தொடர்ந்துவரினும், அலகு பெறா - என்பது. 33
743 விட்டிசைக்கும் இடங்களிலேயே தனிக்குறில் சீர் முதற்கண் நேர் அசையாகக் கொள்ளப்படும்; தனி நெடில் அளபு எடுத்தால் நேர் நேர் ஆகும்; குறில் நெடில் அளபு எடுத்தால் நிரைநேர் ஆகும் - என்பது. 34
744 நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் கலிப்பாவினுள்ளும் அகவற்பாவினுள்ளும் கடியப்படும்; கலிப்பாவில் நேர் ஈற்று இயற்சீர் வருதல் கூடாது; ஏனைய பாக்கள் எல்லாச் சீர்களும் தளைகளும் மயங்கி வரப்பெறும்; வெண்பாவினுள் நிரைஈற்று உரிச்சீரோ வெண்டளையை அன்றிப் பிற தளைகளோ விரவுதல் கூடாது - என்பது.
745 இயற்சீர் வெள்ளடியும் வஞ்சியடியும் பெரும்பான்மையும், வெண்சீர் வெள்ளடியும் கலி அடியும் ஒரோ வழியும், ஆசிரியப்பாவில் மயங்கிவரும்; வெண்பா அடியும் ஆசிரிய அடியும் கலிப்பாவுள்ளும், ஆசிரிய அடியும் கலியடியும் பெரும்பான்மையும், வெண்பா அடி சிறுபான்மையும், வஞ்சிப்பாவினுள்ளும் மயங்கி வருதலும், ஐஞ்சீர்அடி கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் அருகிவருதலும் நீக்கும் நிலைமையில - என்பது. 36