பக்கம் எண் :

232

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

பாக்களுக்கு அடிவரையறை

746.

ஈரடி வெண்பாச் சிறுமை, மூஅடி
ஆசிரி யத்தொடும் வஞ்சி, எஞ்சியது
ஒருநான்கு ஆகும் இழிபே; பெருமை
முந்நான்கு, ஆயிரம், ஆயிரம், முடிவிலது,
என்னா வரூஉம் இயல்பினது என்ப.
 
 

- தொ. பொ. 374

 
இது நான்கு பாவிற்கும் சிறுமை பெருமைக்கு எல்லை ஆகிய அடிவரையறை
உணர்த்துகின்றது.

     இ-ள் : இரண்டடி வெண்பாவிற்குச் சிற்றெல்லை என்றும் மூன்றடி
ஆசிரியப்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் சிற்றெல்லை என்றும், ஒழிந்த கலிப்பாவிற்கு
நான்கடி சிற்றெல்லை என்றும்,

     இவற்றிற்கு முறையே பன்னிரண்டு அடி வெண்பாவிற்கும், ஆயிரம் அடி
ஆசிரியப்பாவிற்கும் வஞ்சிப் பாவிற்கும் பேரெல்லை என்றும், அடிவரையறை இல்லை
என்று சொல்ல வருகின்ற தன்மையை உடைத்துக் கலிப்பாவிற்கு என்றும் கூறுவர்
ஆசிரியர் என்றவாறு.

 

`படைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை
வரைத்துஇத் துணையென வைத்துவரை இல்என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே'
 
     
என்ப ஆகலின் ஈண்டுப் பெருமைக்கு எல்லை கூறியவாறு என்னை எனின், அங்ஙனம்
கூறிய காக்கைபாடினியார் பொதுமையே கூறி ஒழிந்தமையான், இவர் அஃது ஒழித்து,

 

`ஆசிரியப் பாவின் அளவிற்கு எல்லை
ஆயிரம் ஆகும் இழிபுமூன்று அடியே.'
 
 

- தொ. பொ. 469

 
எனவும்,