பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 40

255

 
     ஒருதலைக் காமத்தைப் பொருந்திய கைக்கிளையும்,

     முற்பருவத்துக் கைத்தும் துவர்த்தும் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும்
கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கும் எனக் கருதிப்
பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினால் மெய்யாக அறிவுறுத்தும் வாயுறைவாழ்த்தும்,

     வியப்புஇன்றிப் பெரியோர் நடுவண் அடங்கி வாழ்தல் கடப்பாடு எனச்சொல்லிச்
செவிக்கு அறிவுறுத்தும் செவி அறிவுறூஉவும்,

     ஆகியபொருள்தன்மையின் அமைதிபெற்ற நான்குகூற்றின்கண் வெண்பா முதலாக
ஆசிரியம் இறுதியாகக் கொள்ளும்படி தொடுப்பது மருட்பாவாம் என்றவாறு.

     வெள்ளை முதலாக ஆசிரியம் இறுதியாகத் தொடுப்பது என்னாது `கொள்ள'
என்றதனானே கைக்கிளைப் பொருள்மேல் இறுதிக்கண் வரும் ஆசிரிய அடி
இரண்டாய்வந்து ஈற்று அயல்அடி முச்சீரான் வரும் என்றும், வெண்பா அடியும்
ஆசிரிய அடியும் ஒத்து வருவதனைச் சமனிலை மருட்பா என்றும், ஒவ்வாது
வருவதனை வியனிலை மருட்பா என்றும் வழங்கப்படும் என்றும் கொள்க.

     இன்னும் அதனானே, புறநிலை வாழ்த்தும், செவியறிவுறூஉவும் வாயுறை வாழ்த்தும்
இவ்வாறன்றி வெண்பாவேயாயும் ஆசிரியமேயாயும் வரப்பெறும் எனவும், கலியும்
வஞ்சியுமாய் வரப்பெறா எனவும் கைக்கிளை எல்லாப் பாவுமாய் வரப்பெறும் எனவும்
கொள்க. மருட்பாவாகவே இவை வருதல் வேண்டும் என்னும் யாப்புறவு இல்லை.