பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 41

261

 

குறள்வெண்பாவின் இனம்

750. ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய்
விழுமிய பொருள்தரும் வெண்செந் துறையும்,
அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளுமாம் தாழிசைக் குறளும்,
குறட்பா இனமாம் கூறுங் காலே.
 
     
இது குறள் வெண்பாவிற்கு இனமாமாறு கூறுகின்றது.

     இ-ள்: ஒழுகல் ஓசையினை உடைய தம்மில் அளவு ஒத்த இரண்டு அடியாகச்
சீரிய பொருளை உடைத்தாய் வரும் வெண் செந்துறையும்.

     இறுதி அடி குறைந்து வருவனவும், ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் இன்றி
வரும் வெண் செந்துறையும், செப்பல் ஓசையில் சிதைந்து வரும் குறள் வெண்பாவும்
ஆகிய முக்கூற்றுக் குறள் தாழிசையும், மேற்கூறிய குறள்பாவிற்கு இனமாம், சொல்லும்
இடத்து என்றவாறு.

     சீர் வரையறுத்திலாமையின் எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும்.

வெண் செந்துறைக்குச் செய்யுள்:

  `ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை'
 
 

- முதுமொழி 1

 
எனவும்,

ஈற்றடி குறைந்த குறள்தாழிசைக்குச் செய்யுள்:

  `நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்றவர்க்கர சாயஞானநற்
கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.'
 
 

 - யா. கா. 27 மே.

 
எனவும் வரும். இதற்கும் அதிகாரத்தானே இரண்டு அடியே கொள்க.