பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 47

279

 
எடுத்துக்காட்டு :
  `கோழியும் கூவின, குக்கில் குரல்இயம்பும்,
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ,
ஆழிசூழ் வையத் தறிவன் அடிஏத்திக்
கூழை நனையக் குடைந்து, குளிர்புனல்
ஊழியும் மன்னுவாம்; என்றேலோர் எம்பாவாய்.'
 
 

- யா. கா. 45 மே.

 
     நாற்சீர் நாலடியான் வருவது கலி விருத்தம் என்று வரையறுத்துக் கூறினார். இஃது
ஐந்து அடியான் வந்தது ஆயினும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பால்
படுத்துக. இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. பிறவும் புராண கவிஞரால்
பாடப்பட்ட இலக்கியங்கள் மிக்கும் குறைந்தும் வரினும், இவ்விலக்கணத்தால்
ஒன்றன்பாற்படுத்தி வழங்கப்படுதல் கொள்க.

(47)

ஓத்த நூற்பாக்கள்

  `மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை
ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே.'
 
 

 - யா. வி. 93

 
  `உணர்த்திய பாவினுள் ஒத்த அடிகள்
வகுத்துரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குந ஆண்டை நடைவகை உள்ளே.'
 
 

- காக்கை.

 
  `ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்கடி வரினும் அப்பாற் படுமே.'
 
 

 - அவிநயம்

 
  `பாவும் இனமும் மேவிய அன்றி
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறறி புலவர் அறிந்தனர் கொளலே.'
 
 

- மயேச்சுரம்

 
  `உலகியல் செய்யுட்கு ஓதிய அளவையின்
குறையவும் விதப்பவும் குறையா ஆற்றல்
இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப.'
 
 

- பாட்டியல்மரபு

 
  `சந்த விருத்தம் தம்முள்ஒத்து எழுத்துஅசை
வந்துஒலி பற்றி வரும்உள பிறவே.'
 
 

- தொ. வி. 249

 

47