பக்கம் எண் :

 

3

 
பகுப்புக்களை உடையதாக விளக்கப்பட்டுள்ளது. வஞ்சிப்பாவின் பகுப்பு எதுவும்
கூறப்படவில்லை. தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவினங்களின் பெயர்களையே
தொல்காப்பியத்தில் காண முடியவில்லை. பாஇனங்கள் போல்வன பண்ணத்தி என்ற
பெயராலேயே உணர்த்தப்படுகின்றன.

     பிற்பட்ட யாப்பிலக்கண நூல்களாகிய அவிநயம் முதலியன பாஇனங்களாகிய
தாழிசை, துறை, விருத்தம் என்பன பற்றிப் பேசுகின்றன. இந்தப் பாகுபாடுகள் யாவும்
நிரம்பா இலக்கணத்தன என்று கொள்ளும் நச்சினார்க்கினியர் இவற்றை எல்லாம்
யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சக ஒரு போகு என்றே குறிப்பிடுகிறார்.

     பிற்காலத்தெழுந்த அவிநயம் முதலிய நூல்களின் பாப்பாவினப் பகுப்பை
அடியொற்றியே யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் இயற்றப்படவே,
அவற்றிற்குச் சிறந்த உரையும் வரையப்பட்டது. நூலும் உரையும் சிறந்து தோன்றிய
இவ்விரு நூல்களுள்ளும் யாப்பருங்கலக்காரிகையே நன்மக்களால் பெரிதும்
பயிலப்படுவதாயிற்று. இவற்றைத் தவிர அவிநயம் முதலியன வழக்கிறந்துவிட்டன.

     தொல்காப்பியம் தனக்குரிய தனித் தன்மையோடு இன்றும் நிலைபெற்றிருப்பினும்
அதன் செய்யுளியலைப் பின்பற்றிப் பாடல் வரைவார் இன்றிலர். விருத்தங்களும்
தாழிசைகளும் வீறு பெற்றெழுந்தபின் பன்னூறு பிரபந்தங்கள் அவற்றின் யாப்பில்
இயற்றப்படவே, தொல்காப்பியம் கூறும் பாவகைகள் அருகியே பின்பற்றப்படுவவாயின.

     வீரசோழியம் - யாப்பருங்கலக்காரிகை குறிப்பிடும் செய்திகளோடு வடமொழி
மரபை ஒட்டிச் சில செய்யுள் வகைகளைக் குறிப்பிடுகின்றது. அவற்றில் இலக்கணங்கள்
நன்கு உணரப்படுமாறில்லை. அவற்றைப் பின்பற்றிச் செய்யுள் பாடுவாரும் இலர். நூலுள்
தேவைப்படும்போது அவை எடுத்துக் காட்டப்படும்.