பக்கம் எண் :

308

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
அத் தரவுகொச்சகத்தைக் கலி விருத்தம் என்றும் பெயரிடலாம் என்று குறிப்பிடுகிறது.
சிந்தியல் வெண்பா ஓசை கெடின் வெண்டாழிசையாம் எனவும், நேரிசை வெண்பா ஓசை
கெடின் வெண்டுறையாம் எனவும் குறிப்பிடுகிறது.

     ஆசிரிய விருத்தத்தில் ஆசிரிய நிலைவிருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம்
என்ற இரு பகுப்பினைச் சுட்டுகிறது. அடிதோறும் பொருள் முற்றிக் கடையிருசீர் ஒரே
சொற்றொடராக ஈரடிகளிலோ நான்கடிகளிலோ வருவது மண்டில விருத்தம், ஏனையது
நிலை விருத்தம். நாற்சீருக்குமேல் கடைஒருசீர் அடிதோறும் ஒன்றாக வருவது வெளி
விருத்தம், இரண்டாக வருவது ஆசிரிய விருத்தம் என்ற வேறுபாடும்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரிய விருத்தத்தில் ஓரடி குறைந்து வருவது
நேரிசைஆசிரியப்பாவின் இனமாகிய நேரிசைத்துறை, இரண்டடி குறைந்து வருவது
இணைக்குறள் ஆசிரியப்பாவின் இனமாகிய இணைக்குறள்துறை, அடிதோறும் பொருள்
முற்றி வருவது அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இனம், நிலைவிருத்தம் நிலைமண்டில
ஆசிரியப்பாவின் இனம், ஆசிரியத் தாழிசையும் நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம்
என்ற செய்திகளும் காணப்படுகின்றன.

     அடிதோறும் பொருள் முற்றிவரும் கலிவிருத்தம் மண்டில விருத்தம் எனவும்
ஏனைய நிலை விருத்தம் எனவும் கூறப்படும். அளவடியின் மிக்குவரும் கலிப்பா
இனங்கள் வெண்கலிப்பாவின் இனம் எனவும், ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவரும்
கலித்தாழிசை ஒத்தாழிசைக்கலிப்பாவின் இனம் எனவும், கலித்துறையும் தனித்துவரும்
கலித்தாழிசையும், தம்முள் ஒத்தும் ஒவ்வாதும் வரும் கலிவிருத்தமும் மயங்கிசைக்
கொச்சகக்கலிப்பாவின் இனம் எனவும் கூறப்படும். கலித்துறை - கட்டளைக் கலித்துறை
எனவும், காப்பியக்கலித்துறை எனவும் இரண்டாகப் பகுக்கப்படுவதும் உண்டு.
காப்பியக்கலித்துறையாவது கலிநிலைத்துறையாம். கட்டளைக்கலித்துறை - கோவைக்
கலித்துறை எனவும் திலதக்கலித்துறை எனவும் இருவகைப்படும். கோவைக்கலித்துறை