பக்கம் எண் :

செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள்

309

 
யாவது ஈற்றடி மூன்றாஞ்சீர்ச்சொல் பக்குவிட்டு முற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசைத்தாய்
வரும். இரண்டாம்சீர் நான்காம்சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க
சிறப்புடைத்தாம். இந்த வரையறை திலதக் கலித்துறைக்கு இல்லை. வஞ்சித்துறையும்
வஞ்சி விருத்தமும் வஞ்சி மண்டிலத்துறை, வஞ்சி மண்டில விருத்தம் எனவும் பெயர்
பெறும். வஞ்சித் தாழிசையும் வஞ்சித்துறையும் குறளடி வஞ்சிப்பாவின் இனம்;
சிந்தடியான் வரும் வஞ்சி விருத்தம் சிந்தடி வஞ்சிப்பாவின் இனம்.

     மூன்றடியாய்த் தம்மின் அளவு ஒக்கின் திரிபாதி எனப்படும்; எழுசீரின் மிக்கும்
குறைந்தும் இரண்டடியாய் அவ்வடியும் தம்முள் அளவு ஒவ்வாது வருவதும், ஓரடியானே
ஒரு செய்யுளாய் வருவதும் குறட் போலியாம். இரண்டடியாய்த் தம்முள் அளவு ஒத்து
வருவன சிந்து எனவும், ஈரடியாய்த் தம்முள் அளவு ஒவ்வாது வருவன சிந்துப்போலி
எனவும் கூறப்படும். கட்டளைக் கலித்துறைக்கும் விருத்தம் என்று பெயரிட்டதுபோலக்
குறள் வெண்பாவிற்கும் சிந்துப் போலி என்று பெயரிடல் பொருந்தும். வெண்பா
இலக்கணங்களில் மிக்கும் குறைந்தும் வருவன வெண்பாப் போலியாம். பொதுவாகத்
தம்மில் ஒத்த அடி நான்கு ஓரெதுகையாய் வருவன விருத்தம் எனப்படும். முதலிடை
கடையடிகள் குறைந்தும் மிக்கும் வரின் சவலையாம். முதலடி குறைந்துவரின் முதற்
சவலையாம். கடையடி குறைந்துவரின் கடைச் சவலையாம். இடையடி குறைந்துவரின்
இடைச் சவலையாம். நான்கடியின் மிக்க அடிகளால் நடைபெற்று அவ்வடிகள் ஒத்தும்
ஒவ்வாதும் வரின் சவலைப் போலியாம். நான்கடியான் வந்த சவலை எதுகையின்றி
வரினும் சவலைப் போலியாம். முதலிரண்டும் மிக்கும் முதலிரண்டும் நைந்தும்
முடிவிரண்டு குன்றி முதலிரண்டு மிக்கும், இடையிடை அஃகியும் மிக்கும் வரினும்
கடைச்சவலைப் பாதச்சமவிருத்தம் என்பாரும் உளர். விருத்த அடிக்குப் பெருமை 26
எழுத்து; 26 எழுத்தின் ஏறின எல்லாம் விருத்தப் போலியாம். தண்டகம் நான்கு
கட்டளை முதலாக வரும்.