பக்கம் எண் :

314

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     இருபத்தேழ் எழுத்து முதலாக உயர்ந்த எழுத்து அடியினவாய் எழுத்தும் குரு
லகுவும் ஒத்துவருவன அளவியல் தாண்டகம். எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு
ஒவ்வாதும் வருவன அளவழித்தாண்டகம். இவற்றிற்கெல்லாம் விரிவாக
எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன.

     ஒருசாரார் சந்தஅடி பலவாய் வருவனவற்றைச் சந்தத் தாண்டகம் என்றும்,
தாண்டக அடி பலவாய் வருவனவற்றைத் தாண்டகச் சந்தம் என்றும், சந்த அடியும்
தாண்டக அடியும் ஒத்து வருவனவற்றைச் சமசந்தத் தாண்டகம் என்றும் வழங்குவர்.
சந்தமும், தாண்டகமும் என்று இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றுகர
இகரங்களை எழுத்தாகவே கொண்டு எண்ணுக. காக்கைபாடினியாரும்.
பாட்டியலுடையாரும், யாப்பியலுடையாரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர் இவற்றையும்
இனத்தின் பாற்படுத்தி வழங்குவர். தொல்காப்பியனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர்
இவற்றையும் மேற்கூறப்பட்ட பாவினங்களையும் கொச்சகப்பாற்படுத்தி வழங்குவர்.

     வெண்பாக்களும் அடிதோறும் எழுத்தெண்ணிப் பாடப்படுவதும் உண்டு.
ஏழெழுத்து முதல் பதினாறெழுத்து முடிய அடிதோறும் பெற்றுவரும் வெண்பாவுக்கு
எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன. ஈற்றடி ஒழிந்து ஏனைய அடி எழுத்து ஒத்து
வருவனவற்றைக் கட்டளை வெண்பா எனவும், ஒவ்வாது வருவனவற்றைக் கலம்பக
வெண்பா எனவும், ஈற்றடி எழுத்தும் ஏனைய அடி எழுத்தும் ஒத்து வருவனவற்றைக்
சமநடை வெண்பா எனவும், ஈற்றடி எழுத்தினோடு ஏனைய அடி எழுத்துச் சில ஒத்தும்
ஒவ்வாதும் வருவனவற்றைச் சமவியல் வெண்பா எனவும், ஈற்றடி எழுத்து மிக்கு
ஏனையடி எழுத்துக் குறைந்து தம்முள் ஒத்து வருவனவற்றை மயூரவியல் வெண்பா
எனவும் வழங்குவர்.

     இங்ஙனமே 13 எழுத்தடி முதலாக 19 எழுத்தடி ஈறாகக் கலிப்பா வரும். 4 எழுத்து
முதலாக 12 எழுத்தின்காறும் இரு சீரடி வஞ்சிப்பா வரும். 8 எழுத்தடி முதலாக 17
எழுத்தடி காறும் முச்சீரடி வஞ்சிப்பா வரும்.