| 316 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | | பொருத்தமின்மையும் இவை நிரம்பா இலக்கணத்தனவாகும் பெற்றியும் நச்சினார்க்கினியர் முதலிய சான்றோரால் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்செய்தியைச் சிறிது விரித்து நோக்குவோம். குறள் வெண்பா இரண்டு அடியினதாகவே அதன் இனங்களாகிய வெண்செந்துறையும் குறட்டாழிசையும் இரண்டடிப் பாடல்களாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடைய சமமான இரண்டடிகளை உடைய பாடல் வெண்செந்துறை. சீர்வரையறை தளைவரையறை இல்லை. குறட்டாழிசை மூவகைத்து. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வரும் செந்துறைச் சிதைவும், முதலடியைவிடச் சீர்கள் குறைந்து வரும் இரண்டாம் அடியை உடைய இரண்டடிப் பாடலும், தளைதட்டி வரும் குறள்வெண்பாவும் குறட்டாழிசை எனப்படும். விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றிப் பாடப்படுவது பாடலாகுமா? கவிகள் இவ்விரண்டும் இல்லாமல் செய்யுள் இயற்றுவார்களா? இன்னதுதான் விழுமிய பொருள், ஒழுகிய ஓசை என்று யாங்கனம் வரையறுப்பது? வெண்டாழிசை எனப்படும் வெள்ளொத்தாழிசை முதல் இரண்டடிகளும் நாற்சீராய் ஈற்றடி முச்சீராய் அமைந்து தளை வரையறையின்றி வருவதாகும். ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும் சிந்தியல் வெண்பாவும் வெள்ளொத்தாழிசையாம். வெண்டுறை சீர்வரையறையின்றி மூன்றடி முதல் ஏழடி எல்லை வரை ஓரொலியும் பல ஒலியும் கொண்டு கடையடிகளில் ஒன்றோ பலவோ சீர் குறைந்து வருவதாம். கடையடி ஒருசீர் குறைந்து ஏனைய அடிகள் நாற்சீரவாய் மூன்றடித்தாய் வரும் வெண்டுறைக்கும் வெள்ளொத்தாழிசைக்கும் வேறுபாடு இல்லை. | | |
|
|