| செய்யுளியல் - யாப்புப்பற்றிய சில செய்திகள் | 317 | | | வெளிவிருத்தம் அடிதோறும் நான்கு சீர்களுக்குமேல் ஐந்தாம் சீர் ஒரூஉத் தொடைபெற்ற ஒரே சொல்லையோ சொற்றொடரையோ கொண்டு மூன்றடியானும் நான்கடியானும் வருவதாகும். இதற்கும் தளைவரையறை இல்லை. வெண்பா என்று அடை ஏதும் இன்றிக் கூறின் அச்சொல் அளவடி வெண்பாவாகிய நாலடி வெண்பாவையே குறிக்கும். அத்தகைய வெண்பாவின் இனங்களின் இலக்கணம் இங்ஙனம் அமைக்கப்பட்டிருப்பது புதுவது புணர்த்ததாகும். சீர்கள் அளவொத்து ஓரெதுகையானமைந்த மூன்றடிப்பாடல் ஆசிரியத்தாழிசை. இது ஒரு பொருள் மேல் மூன்றடுக்கியும் வரும். சீர்தளை வரையறை இல்லை. இங்ஙனமாகவே, அடிதோறும் நாற்சீர் பெற்றுவரும் ஆசிரியத்தாழிசைக்கும் மூன்றடியானமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா விற்கும் வேற்றுமை இல்லை. நிலை மண்டில ஆசிரியப்பாவாயின் மெய்யெழுத்தில் முடிதல் வேண்டும் எனவும் மூன்றடியும் ஈரெதுகையாக இருத்தல் வேண்டும் எனவும் நாமே வேறுபாட்டை வலியக் கற்பித்துக் கொள்ள வேண்டியவராய் உள்ளோம். ஆசிரியத்துறை ஈற்றயலடி குன்றியும், இடையடிகள் சிற்சில குன்றியும் இடை மடக்கியும் சீர்தளை வரையறை இன்றி நான்கு அடிகளான் அமைவது. நாற்சீரடிகளானமைந்து ஈற்றயலடி ஒரு சீர் குறைந்துவரும் ஆசிரியத்துறைக்கும் நான்கடி நேரிசை ஆசிரியப்பாவிற்கும் வேறுபாடில்லை. பல எதுகையாக வரின் ஆசிரியப்பா என்றும் ஒரே எதுகையாக வரின் ஆசிரியத்துறை என்றும் நாமே வலிய வரையறை செய்துகொள்ள வேண்டியவராக உள்ளோம். ஆசிரிய விருத்தமாவது ஆறுக்குக் குறையாத சீர்களை உடைய ஒரே விகற்பத்தனவாகிய சமமான நான்கு அடிகளை உடையது. | |
|
|
|