| | `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொருள் மேருவுக் கடிமுடி யின்றென உம்பருள் அறிவார் உளரோ இலரோ என்றும்.' | | | | | | |
| இது கலித்தாழிசை. |
| | `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்து - நமரங்காள் அம்பொருள் மேருவுக் கடிமுடி இன்றென - நமரங்காள் உம்பருள் அறிவார் உளரோ இலரோ - நமரங்காள்.' | | | | | | |
| இரு வெளி விருத்தம். |
| | `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத் தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே; அம்பொன் மேருவுக் கடிமுடி உம்பருள் அறிவார் ஒருவரும் இலரே.' | | | | | | |
இஃது ஆசிரியத்துறை. இங்ஙனம் ஒரே பாடல் சிற்சில வேறுபாடுகளால் பல பாவினங்களாக ஆகும் நிலையில் தாழிசைதுறை இலக்கணம் அமைந்துள்ளது. இந்த இலக்கணத்திலும் சிற்சில கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலும் ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் முதலியவற்றில் பலப்பல வகைகள் உள. அவற்றின் இலக்கணங்களும் விரித்து உரைக்கத்தக்கன. இக்காலத்து வழங்கும் பலதிறப் பாடல்களுக்கும் இலக்கணம் வகுக்கப்படல் வேண்டும். புலவர் பலரும் தாம்தாம் ஆய்ந்தவாற்றானே யாப்பிலக்கணம் செய்பவாயின், அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு முடிவான யாப்பிலக்கணம் அமைத்தல் இயலும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகியவற்றை வரைய முன்னைய நூல்கள் இவ்வாறே பயன்பட்டுள்ளன. அவற்றைப் பிற்சேர்க்கையில் காணலாம். |
| செய்யுளியல் விளக்கம் முற்றும். |