பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 9

63

 
வெண்பா உரிச்சீர்முன் நேர்வந்து ஒன்றுவது ஆகிய வெண்சீர் வெண்டளையும் நேர்
ஈற்று இயற்சீர்முன் நிரையும் நிரை ஈற்று இயற்சீர்முன் நேரும் வந்து உறழ்தல் ஆகிய
இயற்சீர் வெண்டளையும் என அவ்விரண்டு தளையும் வெண்பாவிற்கு உரிய ஆதலும்,

நிரை ஈற்று உரிச்சீர்முன் நிரைவந்து ஒன்றுதல் ஆகிய ஒன்றிய வஞ்சித்தளையும்
நேர்வந்து உறழ்தல் ஆகிய ஒன்றாத வஞ்சித்தளையும் கடியப்படாது வருதல்
வஞ்சிப்பாவிற்கு உரிய ஆதலும்,

வெண்சீர் முன் நிரை வந்து விகற்பித்தல் கலித்தளைக்கு உரித்தாதலும் தத்தம்
இயல்பினின்றும் தவறாதமுறையான் வரும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

`பண்பினின் வழாஅ' என்ற மிகையானே, தன் சீரோடு வேற்றுச் சீர் ஒன்றியும்
ஒன்றாதும் வருவனவும் சிறப்பிலவேனும் தன்தளையாம் என்றும், நேர் ஈற்றுப்
பொதுச்சீர் எட்டும் நேர் ஈற்று உரிச்சீர் போலக்கொண்டு வருஞ்சீர் முதல் அசையோடு
ஒன்றியது வெண்சீர் வெண்டளை ஆகவும் ஒன்றாதது கலித்தளையாகவும் வழங்கப்படும்
என்றும், நிரை ஈற்றுப் பொதுச்சீர் எட்டும் நிரை ஈற்று உரிச்சீர் போலக்கொண்டு
வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றினும் ஒன்றாது விடினும் வஞ்சித்தளை ஆகவும்
வழங்கப்படும் என்றும், ஓரசைச்சீர் இயற்சீரே போலக்கொண்டு வருஞ்சீர் முதல்
அசையோடு நேராய் ஒன்றியது நேர் ஒன்று ஆசிரியத்தளை ஆகவும் நிரையாய்
ஒன்றியது நிரை ஒன்று ஆசிரியத்தளை ஆகவும் ஒன்றாதது இயற்சீர்
வெண்டளைஆகவும் வழங்கப்படும் என்றும் கொள்க.