பக்கம் எண் :

64

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

நேர் ஒன்று ஆசிரியத்தளையான் வந்த செய்யுள் :

 

`உள்ளார் கொல்லோ தோழி ! முள்ளுடை
அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய்,
துகில்பொதி பவளம் ஏய்க்கும்,
அகில்படு கள்ளிஅம் காடிறந் தோரே'
 
 

- யா. கா. 11 மே.

 
எனவும்,

[உள்ளார் - நேர்நேர் - தேமா; கொல்லோ - நேர்நேர்; மாமுன் நேர் வருதலின் நேர்
ஒன்று ஆசிரியத்தளை - பிறவும் அன்ன.]

நிரை ஒன்று ஆசிரியத்தளையான் வந்த செய்யுள் :

  `திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்,
விண்அதிர் இமிழ்இசை கடுப்பப்
பண்ணமைத் தவர்தேர் சென்ற ஆறே'
 
 

- யா. கா. 11 மே

 
எனவும்,

[திருமழை - நிரைநிரை - கருவிளம்; தலைஇய - நிரைநிரை; விளம்முன் நிரை
வருதலின் நிரை ஒன்று ஆசிரியத்தளை - பிறவும் அன்ன.]

வெண்சீர் வெண்டளையானும் இயற்சீர் வெண்டளையானும் வந்த செய்யுள் :

  `சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி,
முலைவிலங்கிற் றென்று முனிவாள், -- மலைவிலங்கு
தார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ
கார்மாலை கண்கூடும் போழ்து'
 
 

- யா. கா. 11 மே.

 
எனவும்,

[சிலை விலங்கு - நிரைநிரை நேர் - கருவிளங்காய்; நீள் புருவம் - நேர் நிரைநேர்; -
காய்முன் நேர் வருதலின் வெண்சீர் வெண்டளை. என்று முனிவாள் - மாமுன் நிரை
வருதலின் இயற்சீர் வெண்டளை. பொறுக்குமோ கார்மாலை - விளம்முன் நேர்
வருதலின் இயற்சீர் வெண்டளை. பிறவும் அன்ன.]