பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

7

 
ஈற்று நிரை நேர் அசைகள் பற்றிய எடுத்துக்காட்டுக்களும், ஏந்திசை, தூங்கிசை,
ஒழுகிசை இலக்கணங்களும் அவற்றின் எடுத்துக்காட்டுக்களும் தரப்பட்டுள்ளன.

     வெண்பாவகை பொதுவகையான் ஐந்து என்பது அடுத்த நூற்பாவில்
கூறப்படுகிறது. அடுத்த நூற்பா வெண்பாவின் வகைகள் பற்றிய இலக்கணம் நுவல்கிறது.
உரையில் எடுத்துக்காட்டுக்கள் பலவும் தரப்பட்டுள்ளன. அடுத்த நூற்பாவில்
வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்பன கூறும் ஆசிரியர் உரையில்
எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளார்.

     பின் ஆசிரியப்பா ஆமாறு சுட்டப்படுகிறது. அதன் ஈற்றெழுத்தாம்
ஆற்றலுடையன இவை இவை என்பதும் நவிலப்படுகிறது. உரையில் அவற்றிற்குரிய
எடுத்துக்காட்டுக்களையும் காணலாம்.

     அடுத்த நூற்பாவில் ஆசிரியப்பாவின் வகைகள் நான்கு என்று சுட்டிய ஆசிரியர்,
அடுத்து அவற்றின் இலக்கணத்தை விளக்கி உரையில் எடுத்துக்காட்டுக்களும் தருகிறார்.

     அடுத்த நூற்பாவில் ஆசிரியத்தாழிசை, துறை, விருத்தம் என்பனவற்றை விளக்கி
உரையில் அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களும் தருகிறார்.

     பின் கலிப்பா இலக்கணம் கூறும் ஆசிரியர், அடுத்து, அது மூன்று
வகைப்படுமாற்றை விளக்கி, அடுத்த நூற்பாவில் அவற்றின் இலக்கணத்தைத்
தெரிவிக்கிறார். உரையில் கலிப்பா வகைகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன.

     பின் கலித்தாழிசை கலித்துறை கலிவிருத்தம் என்பனவற்றின் இலக்கணம் கூறும்
ஆசிரியர் உரையில் எடுத்துக்காட்டுக்களும் தருகிறார்.