8 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | வஞ்சிப்பாவின் இலக்கணம் கூறி எடுத்துக்காட்டுக்கள் தரும் ஆசிரியர், அடுத்த நூற்பாவில் வஞ்சிப்பா இனங்களின் இலக்கணம் கூறி உரையில் எடுத்துக்காட்டும் தந்துள்ளார். தளை, சீர், வண்ணம் என்பன கெடவரின் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அளபெடையின் குற்றுயிரும் அலகு பெறா எனவும், ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தியல்பிற்றாய் நிற்கும் எனவும், ஆய்தமும் ஒற்றும் அளபெடுப்புழி அலகு பெறும் எனவும், ஈரொற்று மூவொற்றாயினும் அளபு எழாவழி அலகு பெறா எனவும், குறிப்பிடும் ஆசிரியர், உரையில் எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளார். அடுத்து விட்டிசைக்குமிடத்தே தனிக்குறில் நேர்அசை ஆகும் என்பதும், குறில் நெடில் அளபெடுப்பின் நிரைநேர் ஆகும் என்பதும், உரையில் காட்டப்படும் எடுத்துக்காட்டுக்களோடு விளக்கப்படுகின்றன. நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர் கலிப்பா, அகவற்பா என்பனவற்றில் வாரா; கலிப்பாவில் நேர் ஈற்று இயற்சீர் வாரா; ஏனைய எல்லாம் எவ்வகைச் சீரொடும் மயங்கும்; எவ்வகைத் தளையும் மயங்கப்பெறும்; வெண்பாவில் நிரை ஈற்று உரிச்சீரோ பிற தளைகளோ வாரா - என்ற சீர், தளைகட்கு ஆவதோர் இலக்கணம் கூறப்படுகிறது. இயற்சீர் வெள்ளடியும் வஞ்சி அடியும் அகவலில் பெரும்பாலும் மயங்குதலும், வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் ஒரோவழி அகவலில் கலத்தலும், வெண்பா அடியும் ஆசிரிய அடியும் கலியுள்ளும், அகவலும் கலியும் வெண்பாவும் ஒரோவழி வஞ்சியுள்ளும் கலத்தலும், ஐஞ்சீர் அடி கலிப்பாவினுள் அருகி வந்து சேருதலும், ஆகிய செய்தி நீக்கும் நிலைமை இன்று - என்று அடி மயக்கம் கூறப்படுகிறது. ஏற்ற எடுத்துக்காட்டுக்களும் உரையில் உள்ளன. | | | |
|
|