வெண்பாவிற்குச் சிறுமை ஈரடி, ஆசிரியத்திற்கும் வஞ்சிக்கும் சிறுமை மூன்றடி, கலிப்பாவிற்குச் சிறுமை நான்கடி, வெண்பாவிற்குப் பெருமை பன்னிரண்டடி, ஆசிரியப்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் பெருமை ஆயிரம் அடி, கலிப்பாவிற்குப் பெருமைக்கு அடி வரையறை இன்று - என்ற அடி வரையறை அடுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்நூற்பாவில் கூறப்பட்ட செய்தி தொல்காப்பிய நூற்பாவான் உரையில் வலியுறுத்தப்படுகிறது. சிறுமையின் எல்லைக்கு எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன. வண்ணக ஒத்தாழிசைக்கும் அம்போதரங்க ஒத்தாழிசைக்கும் தரவு அடி ஆறே; நேரிசை ஒத்தாழிசையின் தரவிற்குச் சிறுமைக்கு எல்லை மூன்றடி; பெருமைக்கு அளவு உரைப்போர் கருத்தே; தாழிசைக்குச் சிறுமை இரண்டடி; பெருமை ஆறடி; தாழிசை தரவிற் சுருங்கிவருவது; வண்ணகம் அளவடி முதலிய பல அடியானும் வருவது; அதன் சிறுமை நான்கடி; பெருமை எட்டடி - என்று கலி உறுப்புக்களின் வரையறை கூறப்பட்டுள்ளது. பின், வருக்கம், நெடில், இனம், உயிர், யரலழ ஆசு, இடையிட்டது, இரண்டடி, மூன்றாம் எழுத்து ஒன்றி வருவது - ஆகிய தொடை விகற்பங்களும், கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என்ற தொடை விகற்பங்களும் போல்வன எடுத்துக்காட்டோடு சுட்டப்பட்டுள்ளன. அடுத்துப் புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ ஆகிய நால்வகைப் பொருள்களின்மேல் வெண்பா முதலாகத் தொடங்கி ஆசிரியத்தான் இறுவது மருட்பா என்பது எடுத்துக்காட்டுடன் குறிக்கப்பட்டுள்ளது. பின் குறட்பாவின் இனமாகிய வெண் செந்துறையும் குறள் தாழிசையும் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன. அடிமுதல் பொருளோடு வரும் கூன், வஞ்சிப்பாவின்கண் இறுதிக்கண்ணும் வருமாறு, அடுத்துக் கூறப்பட்டுள்ளது. உரிய எடுத்துக்காட்டுக்களும் தரப்பட்டுள்ளன. | |
|
|
|