| 
இலக்கண விளக்கம் 
பொருளதிகாரம் - பாட்டியல் 
முன்னுரை ____        தனிநிலைச் செய்யுளமைப்பை 
விரித்துரைக்கும் செய்யுளியலின்பிற்கூறு செய்யுளின் முதற்சீரின் பத்துவகைப் பொருத்தம்,
 பலவகைப்பட்ட பொருள்தொடர்நிலை சொல் தொடர்நிலைச்
 செய்யுட்கள் முதலியபற்றி  நுவலும் பாட்டியலாகும்.
         
சங்ககாலத்துக்குப் பின் பாட்டியல் இலக்கணம் விரிவாகஇயற்றப்படலாயிற்று. பாட்டியல்நூல் அமைக்கப்படுவதில் அகத்தியநெறி,
 இந்திரகாளீயநெறி என்ற இருவகை நெறிகள் நிலவியிருந்தன என்று
 கருதப்படுகிறது. அவிநயனார் கலாவியல், பொய்கையார் கலாவியல்,
 செய்யுள் வகைமை, முள்ளியார் கலித்தொகை, கல்லாடர் பாட்டியல்,
 வருணர் பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள் இக்காலத்தில்
 வழக்கொழிந்துவிட்டன. இனி, வழக்கிலுள்ள பாட்டியல் நூல்களை
 நோக்குவோம்.
   1. பன்னிரு பாட்டியல்        இன்று 
வழக்கிலுள்ள பாட்டியல் நூல்களில் காலத்தால் முற்பட்டதும்,  விரிவாக அமைந்ததும், ஆசிரியர் பலருடைய நூற்பாக்களின் தொகுப்பாக
 அமைந்ததும் பன்னிரு பாட்டியல் என்ற நூலேயாகும். இது 360
 நூற்பாக்களை உடையது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
 
 |