பக்கம் எண் :

New Page 1

14                    

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

20.  மெய்க்கீர்த்தி மாலை

 

    சொற்சீரடியாலே அரசனுடைய செயல்கள் பற்றிய புகழைக் கூறும்
 பிரபந்தம் மெய்க்கீர்த்திமாலையாகும்.
 

21.  காப்புமாலை

 

    தலைவனைக் கடவுள் காக்க வேண்டும் என்று பாடப்படும் 3, 5
 அல்லது 7 பாடல்கள் கொண்ட பிரபந்தம் காப்பு மாலையாகும்.
 

22.  வேனில்மாலை

 

    இளவேனிலையும் முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடப்படும்
 பாடல்களின் தொகுதி வேனில்மாலை ஆகும்.
 

 23.  பல்சந்தமாலை

 

    பத்துவகைச் சந்தங்களில் ஒவ்வொரு சந்தத்திற்கும் ஒரு கவி முதல்
 பத்துக்கவிவரை பாடப்படும் பிரபந்தம் பல்சந்தமாலையாம்.

 24.  அங்கமாலை

 

    வெண்பாவாலோ வெளிவிருத்தத்தாலோ ஆண்மகன் உறுப்புக்களையோ
 பெண்மகள் உறுப்புக்களையோ முறையாக அந்தாதித் தொடையுறப் பாடும்
 பிரபந்தம் அங்கமாலை ஆகும்.
 

25.  வசந்தமாலை

 

    தென்றலை வருணித்து அந்தாதியாகப் பாடப்படும் பாடல்களின்
 தொகுதி வசந்தமாலையாகும்.
 

26.  நவமணிமாலை

 

    வெண்பா முதலாகப் பாவும் பாவினமுமாக அந்தாதித் தொடையில்
 பாடப்படும் ஒன்பது பாடல்களின் தொகுப்பு நவமணி மாலையாகும்.