பக்கம் எண் :

168                        இலக
168

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

மறம் - மறக்குடி மகளை மணம்பேச வேந்தன் விடுத்த தூதனிடம்

     மறவன் மணம் மறுத்துப் பேசுவது.

 

பாண் - பரத்தையிற் பிரிந்த தலைவனிடமிருந்து வந்த பாணனிடம்

     தலைவியோ தோழியோ கூறுவது.

 

களி - கட்குடியர் கள்ளையும் அது உண்டாகும் பனை

     முதலியவற்றையும் சிறப்பித்துக் கூறுவது.

 

சித்து - இரசவாதிகள் தம்முடைய திறமையைக் கூறுவது.

 

இரங்கல் - தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கி நிற்கும் நிலையைத்

   தோழி கூறுவது. தலைவிதானே கூறுவதும் ஆம்.

 

கைக்கிளை - தலைமகளைக் காமுற்ற தலைவன் ஒருதலைக்காமத்தால்

    கூறுவது.

 

தூது - பிரிந்த தலைவன் தலைவியர் பறவை முதலியவற்றைத் தூதாக

    அனுப்புவது.

 

வண்டு - வண்டின் பெருமை கூறி அதனைத் தூது விடுவது.

 

தழை - பாங்கி தலைவன் தந்த தழையைத் தலைவியை ஏற்பிப்பது.

 

ஊசல் - மகளிர் ஊசலாடும் சிறப்பினைக் கூறுவது.

 

கொற்றியார் - வைணவச் சின்னங்களுடன் பிச்சை எடுக்க

     வருவாளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவது.

 

பிச்சியார் - பிச்சை வாங்கச் செல்லும் சிவ வேடங்கொண்ட

     பெண்ணைக் கண்ணுற்ற காமுகன் ஒருவன் கூறுவது.

 

இடைச்சியார் - இடைக்குல மகளை வீதிவாய் மோர்விற்க

     வந்தஞான்று கண்ட காமுகன் கூறுவது.

 

வலைச்சியார் - மீன் உணக்கும் செம்படவப் பெண்ணைக் கண்ட

     காமுகன் கூறுவது.

 

     கலம்பகம் பெரும்பாலும் நூறு பாடல்களை உடையதாகவே காணப்படும். பாடல்வரையறை அடுத்த நூற்பாவில் சொல்லப்பட்டுள்ளது.