|
18
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
தனிநிலைச் செய்யுள் வளமடல் முதலாக மஞ்சரி ஈறாகச் சொல்லப்பட்ட
இருபத்திரண்டும் பிறவும் ஆம்:
1. வளமடல்
அறம் பொருள் வீடு என்ற மூன்றனையும் இகழ்ந்து மகளிர் மாட்டு
நுகரும்காம இன்பமே வாழ்க்கைப்பயன் என்று இன்னிசைக்
கலிவெண்பாவால் தலைவன் பெயரை எதுகையாகக் கொண்டு பாடும்
பிரபந்தம் வளமடல் ஆகும்.
(திருமங்கையாழ்வார் அருளியுள்ள பனுவல் ஆறனுள்ளும்
திருநறையூர்ப் பெருமான்மீது அருளியுள்ள சிறியதிருமடல், பெரியதிருமடல்
என்ற இரு பிரபந்தங்களும் தலைவன் பெயரை எதுகையாகக்கொண்டு
பாடப்பட்டுக்ற்பார்க்குப் பெருவிருந்தாக அமைந்துள்ள திறம் காண்க.)
2. உலாமடல்
கனவில் தலைவி ஒருத்தியை எதிர்ப்பட்டுக் கூடிய தலைவன் நனவில்
அவளை அடைவதற்காக மடல் ஊர்வானாகக் குறிப்பிடும் நேரிசைக்
கலிவெண்பா உலாமடலாகும்.
3. உலா
தலைவனுடைய சிறப்புக்களைக் கூறி அவன் பரம்பரைச் சிறப்பை
மகளிர் செறிந்த தெருக்களினூடே அவன் உலா வரவும் பேதை பெதும்பை
மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் என்ற ஏழு பருவத்துப்
பரத்தையர் அவன் தொடர்பு கருதி எண்ணமிட்டு அவனைத் தொழ அவன்
பவனி வருதலை நேரிசைக் கலிவெண்பாவால் பாடும் பிரபந்தம் உலாவாம்.
பேதைக்கு ஐந்து முதல் ஏழும், பெதும்பைக்கு எட்டுமுதல் பதினொன்றும்,
மங்கைக்குப் பன்னிரண்டும் பதின்மூன்றும், மடந்தைக்குப் பதினான்கு முதல்
பத்தொன்பதும், அரிவைக்கு இருபதுமுதல் இருபத்தைந்தும், தெரிவைக்கு
இருபத்தாறு முதல் முப்பத்தொன்றும், பேரிளம்பெண்ணிற்கு முப்பத்திரண்டு
முதல் நாற்பதும் ஆண்டு வரையறையாம்.
|