18. ஆற்றுப்படை
கூத்தர் பாணர் பொருநர் விறலியர் ஆகியவர்களை
ஆற்றுப்படுத்தும் செய்தியை ஆசிரியப்பாவால் பாடும் பிரபந்தம்
ஆற்றுப்படையாம்.
19. தூது
கலிவெண்பாவினால் பிரிதல் துன்பமுற்ற தலைவனோ
தலைவியோ உயர்திணைப்பொருளையும் அஃறிணைப்பொருளையும் தூது
செல்லுமாறு அனுப்புதலைக் குறிப்பிட்டமைக்கும் பிரபந்தம் தூதாகும்.
ஆற்றுப்படை நான்காகவே தொகை இருபத்திரண்டு ஆயவாறு.
பா வரையறை
அகப்பொருளைக் கூறும் ஆசிரியப்பாவினுள் வஞ்சி அடிகள்
கலத்தல் கூடாது. கலிப்பா பெரும்பாலும் அகப்பொருள் பற்றியே அமையும்.
வஞ்சிப்பா தனிப்பாடலாக அமையுமேயன்றித் தொடர்ந்த பலபாடல்களாக
இயற்றப்படாது.
அகலக்கவிக்குப் பெயரிடல்
அகலக்கவிக்குப் பெயரிடுங்கால் பொருள், இடம், காலம்,
தொழில், உறுப்பு, எல்லை, செய்தோன், செய்வித்தோன், பெயராலே
முறையே ஆசாரக்கோவை, மதுரைக்காஞ்சி, வேனில் விருத்தம், ஊசல்,
நயனப்பத்து, பாதாதிகேசம், அகத்தியம், பாண்டிக்கோவை என்பனபோலப்
பெயரிடுதல் வேண்டும்.
பா - வருணம்
வெண்பா அந்தணர் பா எனவும் ஆசிரியப்பா அரசர் பா
எனவும் கலிப்பா வணிகர் பா எனவும் வஞ்சிப்பா வேளாளர் பா
எனவும் வரையறுத்துக் கூறப்படும்.
|