24
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
அழகும் பெற்று, முப்பத்திரண்டு உத்தியும் அமையப்பெற்று, ஒரு
பொருளையே தான் குறிப்பிடும் நூற்பா, இனமான பல நூற்பாக்களின்
தொகுப்பாகிய ஓத்து, பல ஓத்துக்களின் தொகுப்பாகிய படலம், பல
படலங்களின் தொகுப்பாகிய பிண்டம் ஆகியவற்றால் தோன்றும் என்பர்
புலவர்.
சூத்திரம்
சூத்திரமாவது சிறிய கண்ணாடியில் காணப்படும் நிழலாகிய மாயா
பிம்பம் போலப் பொருளை விளங்கத் தோற்றுவித்துச் செய்திகள் தன்னிடம்
தெளிவாக விளங்கத் தொகைவகைவிரி என்னும் நூல் யாப்பினுள் ஒன்றுபற்றி
அமைவதாம்.
ஆற்றொழுக்கு, தவளைப்பாய்த்து, சிங்கநோக்கு, பருந்தின் வீழ்வு
என்று சூத்திரக் கிடக்கை நான்கு வகையுள் அடங்கும்.
சூத்திரத்துக்குமுன் காணப்படவேண்டிய சூத்திரப் பாயிரத்தைச்
சூத்திரமாகக்கொண்டு செய்தலும், காண்டிகை உரையைக் குற்றமற்ற
சூத்திரமாகச் செய்தலும், கருத்துப் பொருளாய்க் கிடந்ததனை எடுத்துக்
கூறுதலும், எய்தியதனை விலக்கிக் கூறுதலும், பாட்டிடை வைத்த குறிப்பு,
பாவின்று எழுந்த கிளவி, பொருளொடு புணராப் பொய்மொழி,
பொருளொடு புணர்ந்த நகைமொழி என்ற நால்வகை உரையான் ஓரும்
திறத்துடன் குற்றமற நாடிப் புணர்க்கப்படுதலும், சில்வகைப்பட்ட
எழுத்துக்களால் சுருங்கச் சொல்லப்பட்டுச் சொல்லுங்கால் பலவகை
உரைகளையும் அகத்தடக்கி நுண்மையும் வண்மையும் பெற்றுத்
துளக்கலாகாத் துணைமை எய்தி அளக்கலாகா அரும் பொருளது ஆதலும்
சூத்திரத்து இயல்பாகும்.
ஓத்து
இனமான மணிகளை வரிசைப்பட வைப்பதுபோல இனமான பொருளை
ஓரிடத்துத் தொகுத்து வைப்பதே ஓத்தாகும்.
படலம்
பலவேறு வகையான செய்திகளைப் பலவேறு இயலாகத் தொகுத்துக்
கூறுவது படலமாகும்.
|