பிண்டம்
சூத்திரம் ஓத்துப் படலம் என்ற மூன்றனையும் கொண்டு நடப்பது
பிண்டமாகும்.
குற்றம்
கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,
பொருளில மொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று
ஆதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னான் ஒருபொருள்
கருதிக் கூறல், என்ன வகையினும் மனங்கோளின்மை முதலியவை
குற்றங்களாம்.
உத்தி வகை
நுதலியது அறிதல் முதலாக உத்திவகை முப்பத்திரண்டு எனப்படும்.
இவற்றிற்கு இனமும் கொள்ளப்படும்.
முதல் நூல்
வினையின் நீங்கி விளங்கிய அறிவாகிய பரஞானத்தான் உளதாய
சீவன்முத்தி பெற்றோனால் செய்யப்படுவது முதல் நூலாம்.
வழி நூல்
முதல்நூலின் வழியே வழிநூல் - தொகுத்தும், விரித்தும்,
தொகைவிரியாகவும், மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தும் இயற்றப்படும்.
சார்பு நூல்
முதல்நூல் வழிநூல் இவற்றை ஓரளவு ஏற்றுக்கொண்டு வேறுபாடுகள்
சில கொண்டு அமைவது சார்பு நூலாகும்.
உரைவகை
பாட்டிடை வைத்த குறிப்பு, பா இல்லாது உரைநடையாகவே அமைந்த
கிளவி, பொருளொடு புணராத பொய்மொழி, பொருளொடு புணர்ந்த
நகைமொழி என உரைவகை நான்காகும்.
பிசி
உவமையை அடிப்படையாகவும், ஒன்று சொல்ல மற்றொன்று
தோன்றுதலைச் செய்யும் சுட்டினை அடிப்படையாகவும், கொண்டு,
இருவகையாகப் பிசிச் செய்யுள் தோன்றும்.
|