பக்கம் எண் :

294
294

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

என்ற நன்னூல் நூற்பாப் பொருளை அடியொற்றி விளக்கம் தந்துள்ளார்.
இந்நூற்பா தொல்காப்பியப் பொருட்படல 484ஆம் நூற்பா. (பேரா) இதற்கு
உரையாசிரியர் சூத்திரமாவது கண்ணாடியின் நிழல் போல விளங்கத்
தோன்றி ஆராயாமல் பொருள்நனி விளங்குமாறு யாப்பின்கண்ணே தோன்ற
யாப்பது என்றவாறு.

 

     ஆடி நிழலின் அறியத்தோன்றுதலாவது சூத்திரம் படித்த அளவிலே
அதனால் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு தோற்றல். நாடுதலின்றிப்
பொருள்நனி விளங்க யாத்தலாவது, அதன்கண் யாக்கப்பட்ட சொற்குப்
பொருள் ஆராயாமல் புலப்படத் தோன்றுமாறு யாத்தல் என விளக்கம்
தந்துள்ளார்.

 

     இந்நூற்பாவிற்குப் பேராசிரியர் ‘மேல் நுதலியவற்றுள் ஒரு பொருள்
நுதலிய எனப்பட்ட சூத்திரப்பொருள் நுவலுங்கால் ஆடி சிறிதாயினும்
அகன்றுபட்ட பொருளை அறிவித்தாற்போலத் தேர்தல் வேண்டாமை
அவ்வகன்ற பொருள் அடங்கு மாற்றான் அச்செய்யுளுள் தோன்றச் செய்து
முடிக்கப்படுவது என்றவாறு என்று உரை கூறி, 655ஆம் நூற்பா உரையில்
‘ஆடி நிழல் போல் பொருளானும் தேர்தல் வேண்டாமல் பொருட்பெற்றி
உணர்கின்றாங்குச் சூத்திரத் தொடருள் இலக்கியம் இன்று ஆயினும்,
அதனை இது கேட்டான் காணுமாற்றான் செய்தலாயிற்று’ என்ற விளக்கமும்
தந்துள்ளார்.

 

     கண்ணாடியில் காணப்படுவது பொருளின் மாயா பிம்பமே. அம்
மாயாபிம்பத்தைக் கண்ட அளவிலேயே நேராகப் பொருளைக் கண்ட நிறைவு
ஏற்படுவதுபோலச் சூத்திரத்தொடரில் உதாரணம் இல்லையாயினும்
அந்நூற்பாவினைக் கண்ட அளவிலேயே அதன் எடுத்துக்காட்டுக்கள்
கண்டார் மனத்தில் பதிந்துவிடுதல் என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ள
விளக்கம் மிகச் சிறந்தது. சிறு கண்ணாடியில் பெரிய பொருள்களின் நிழல்
தெளிவாகப் புலனாவது போல் சில சொற்களும் பல கருத்துக்கள் புலப்பட
அமைப்பது நூற்பா என்ற விளக்கமும் ஏற்றதே.