பக்கம் எண் :

296
296

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

தன்னை அடுத்த ஒன்றிரண்டு நூற்பாக்களை விடுத்து அடுத்த நூற்பாவொடு
பொருள் தொடர்பு கொள்வது தேரைப்பாய்வு. சிங்கம் தான் நடந்து
செல்லும்போது இரு மருங்கும் பார்த்துக் கொண்டே செல்வதுபோலத்
தனக்கு முன்னும் பின்னும் உள்ள நூற்பாக்கள் தன் பொருளைத் தொடர்பு
கொண்டு இயங்குமாறு செய்யும்நிலை சீயநோக்கு. வானத்தில் பறக்கும்
பருந்து வானில் இருந்தபடியே தரையில் ஓர் இரையைக் கண்டவழித் தான்
திடீரென்று கீழே இறங்கி அவ்விரையைக் கவர்ந்து செல்லுவது போல ஒரு
நூற்பா தனக்குப் பிற்பட்டுப் பல நூற்பாக்களுக்குப் பின்உள்ள நூற்பாவோடு
பொருள் தொடர்பு கொள்ளுதல் பருந்தின் வீழ்வு.

 

     நூற்பா நிலைகள் நான்கனுள் ஆற்றொழுக்கே பெரும்பான்மை; ஏனைய
மிக அருகியே காணப்படும் என்பது.
 

     ‘அவையடக்கியலே’ (இ. வி. பொ. 516) என்ற நூற்பா முன்கூறப்பட்ட
எழுத்துப்படலத்துக்கும் சொற்படலத்துக்கும், இப்பொழுது கூறப்படும்
பொருட்படலத்துக்கும் பொருந்தி வருவதால் சீயநோக்கு. ‘இத்திறம் தசாங்கத்
தயற்கும் ஒக்கும்’ இ. வி. 781 என்ற நூற்பா, தசாங்கம் பற்றிய 840ஆம்
நூற்பாவோடு தொடர்பு கோடல் பருந்தின் வீழ்வு.
 

      ‘மூன்றுயிரளபு நன். எழு. 44 என்ற நூற்பா அடுத்த நூற்பாவை
விடுத்து ‘ஆவியும் ஒற்றும்’ நன். எழு. 46 என்ற நூற்பாவோடு
தொடர்புகோடல் தவளைப்பாய்த்தாம்.
 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘ஆற்றொழுக்கு

     அரிமா நோக்கம் தவளைப் பாய்த்துப்

     பருந்தின் விழுக்காடு அன்னசூத் திரநிலை.’           

  - நன். 18

 

     ‘உரைத்த நதி சீயமோ(டு) ஒண்பருந்து தேரை

     நிரைத்ததொழில் சூத்திரத்தின் நின்று - விரைக்குழலாய்

     செம்பொருள் ஞாபகமாம் செய்தி நியதியாம்

     கம்பமிலா நூலின் கருத்து.’          

- வெண். பாட். ஒ. 24