பக்கம் எண் :

ப
பாட்டியல் - நூற்பா எண் 138 

 307


 

           இஃது எண்ணான்கு உத்தியின் பெயரும் இயலும் கூறுகின்றது.

 

     இ - ள்: சாத்துவிக குணமுற்ற அறிவினாலே தெளிந்தோர் கண்ட உத்தி
வசனத்தின் வேறுபாடுகளை விரித்துக் கூறப்புகின், கருதியது அறிதல் முதலாக
உய்த்துக் கொண்டு உணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டனோடும்
அவை போல்வன பிறவும், நூலின் கண்ணவைகளைக் கூறிய திறத்தான்
இலக்கணங்கள் எல்லாம் அகப்பட ஆராய்ந்து, மனத்தினாலே எண்ணும் குற்றம்நீங்க
ஆராய்ந்து அப்பொருளை எடுத்துக்கொண்டு கூறியவற்றிற்கு இனமாகவும் சேர்வித்து
அறிவித்தலை விரும்புக, நூல் முடிபு அறிந்து அதனான் மேதக்க அறிவுடையோர்
செய்த நூற்கண் என்றவாறு.

 

     உத்தியினையும் உத்திக்கு இனமாதலையும் கண்டு எடுத்துக் காட்டப்புகின்
அவை விரிந்து கிடத்தலான் அவை நுண்ணுணர்வான் ஆராய்ந்து இந்நூற்கண்ணும்
தொல்காப்பியம் முதலிய பெரு நூற்கண்ணும் ஆங்காங்கு உணர்க.
  

(138)                                                                                

விளக்கம்

 

     உள்ளதை உள்ளவாறு தெள்ளிதின் கூறல் உத்தி எனவும் நுதலியதறிதல்
முதலிய முப்பத்திரண்டும் உத்திவகை எனவும் கொள்ளுவது தொல்காப்பியனார்
கருத்தாதல் பேராசிரியர் உரையான் (தொ. பொ. 665) உணரப்படும்.
 

     ஒவ்வோருத்தி வகைக்கும் உத்தி இனமும் கொள்ளப்படும். இவற்றை விளக்கிப்
பேராசிரியர் எடுத்துக்காட்டுக்களும் தந்துள்ளார்.