பக்கம் எண் :

310                      இலக
310

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

15. எதிரது போற்றல்:

 

    பின்னர் ஒரு நூற்பாவில் தான் கூறக்கருதியுள்ள செய்தியை
மனங்கொண்டு, முன்னர் வேறொரு பொருளைக் குறிப்பிடுதல்.

 

16. மொழிவாம் என்றல்:

 

    ஓரிடத்தில் கூறப்பட வேண்டிய பொருண்மை ஒன்றனை ஒரு
காரணம்பற்றிப் பின் ஓர் இடத்தில் குறிப்பிடுவாம் என்றல்.
 

17. கூறிற்றென்றல்:

 

    முன் கூறப்பட்டதோர் இலக்கணத்தினைப் பின் மற்றொரு
பொருளுக்கும் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, அதனையே
மீண்டும் எடுத்துக் கூறாது முன்னரே கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிடல்.

 

18. தான் குறியிடுதல்:

 

    உலக வழக்கில் காணப்படாத பெயர்களை இலக்கண ஆசிரியன் தானே
மனங்கொண்டு தன் நூலில் பெயரிட்டு அழைத்தல்.

 

19. ஒருதலை அன்மை:

 

    ஓர் இலக்கணத்தைக் கூறி இது யாண்டும் வாராது: வரும் இடம்
நோக்கி அறிக; என்று கூறி, விதந்து கூறாது வாளா விட்டு விடுதல்.

 

20. முடிந்தது காட்டல்:

 

    ஒரு பொருளை விளக்க வேண்டிய இடத்து ஆசிரியன் தானே

விளக்கம் கூறிப்புலப்பட வையாது, இது சான்றோர் அறுதியிட்டு உறுதிசெய்த
கருத்து என்றே கூறிவிடுத்தல்.

 

21. ஆணை கூறல்:

 

    ஆசிரியன் தன் நூலில் தான் குறிப்பிடும் சில செய்திகளை வேறு
காரணம் எதுவும் கூறாது ‘இக்கருத்தை எல்லீரும் கொண்மின் என்பது என்
ஆணை’ என்றே கூறி விடுத்தல்.